சேலம், தர்மபுரியில் 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சேலம்: சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 8வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்-சென்னை இடையே ₹10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. விளை நிலங்கள், மலைகளை அழித்து சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.

இந்தசூழலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் சர்வே எண்ணுடன் கூடிய பட்டியலை அரசு, அறிவிப்பாக வெளியிட்டது. இதையடுத்து தற்போது, விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். சேலம் நாழிக்கல்பட்டியில் விவசாயி செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 300 விவசாயிகள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

அவர்கள், தங்களது விளை நிலத்தை அழித்து 8 வழிச்சாலை அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே சென்னைக்கு இருக்கக்கூடிய 3 சாலைகளை விரிவுபடுத்திக் கொள்ளட்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் தர்மபுரியில் ேநற்று 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தாலுகா கோம்பூர், வேடகட்டமடுவு உள்ளிட்ட 34 ஊராட்சியைச் சேர்ந்த 200 விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து 8வழிச்சாலை திட்ட நில எடுப்பு அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் வரை, கோஷம் எழுப்பியவாறு பேரணியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து தனி மாவட்ட வருவாய் அலுவலர் முகுந்தனிடம்  சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று தனித்தனியாக ஆட்சேபனை மனு அளித்தனர். பேரணியின்போது கரும்பு, மஞ்சள், தென்னங்கன்று உள்ளிட்ட பயிர்களை பிடித்தவாறு பேரணியாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: