காரைக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே திருமணத்தில் பாரம்பரிய முறைப்படி மாப்பிள்ளை அழைப்பை மாட்டு வண்டி மூலம் நடத்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.வளர்ந்து வரும் நாகரீக மோகத்தில் தற்போது திருமணங்கள் பல லட்ச செலவில் நடத்தப்பட்டு வருகின்றன. விமானம், ஹெலிகாப்டரில் பறந்தபடியே திருமண வைபவங்கள் நடத்துவது வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. எனினும் பழமை மாறாத திருமணங்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அடிக்கடி நடந்து வருவது வியப்பை ஏற்படுத்துகிறது.

காரைக்குடி அருகே உ.சிறுவயலை சேர்ந்த தம்பதியினர் நாச்சியப்பன்-மீனாள். இவர்களது மகள் நாச்சம்மை அன்னபூரணிக்கும், நற்சாந்துபட்டியை சேர்ந்த தம்பதி லட்சுமணன்-மீனாட்சி மகன் கணபதிக்கும் நேற்று திருமணம் நடந்தது. முன்னதாக காலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது பழைய பாரம்பரிய முறைப்படி மாப்பிள்ளை கணபதியின் விருப்பத்திற்கேற்ப இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் அலங்காரம் செய்து, கோயிலில் இருந்து திருமணம் நடந்த வீடு வரை அழைத்து வந்தனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

மாப்பிள்ளை கணபதி கூறுகையில், ‘‘நாகரீக வளர்ச்சியில் நாம் பழமையை மறந்து விட்டோம். பாரம்பரிய முறைப்படி எனது திருமண அழைப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெண் வீட்டாரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்களும் ஒத்துழைப்பு கொடுத்து மாட்டு வண்டி ஏற்பாடு செய்தனர். என்னதான் விலை உயர்ந்த காரில் சென்றாலும் இதுபோன்று வராது. மாட்டு வண்டியில் பயணம் செய்தது புது அனுபவமாக இருந்தது’’ என்றார்.

இதுகுறித்து, பெண்ணின் நாச்சியப்பன் கூறுகையில், ‘‘நகரத்தார் திருமணங்கள் முன்பு 5 நாட்கள் நடக்கும். திருமணத்திற்கு எந்த ஊராக இருந்தாலும் மாப்பிள்ளையை மாட்டு வண்டியில் தான் அழைத்து செல்வார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கார், குதிரை பூட்டிய சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் பழைய பாரம்பரிய முறை திரும்புவது வரவேற்கக்கூடியது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: