அமைச்சர்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் எதிர்கொள்ளத் தயார் : முதல்வர் பேச்சு

சேலம்: தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் தம்மம்பட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று கணக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த அரசை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே முன்அனுமதி இல்லாமல் சந்திக்க கூடிய ஒரே முதல்வர் நான்தான்.  இதைத்தான் செயல்படாத அரசு, என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.இன்றைக்கு கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. காவிரி படுகையில் உள்ள மாநிலங்களின் அனுமதி பெறாமல் எந்த ஒரு கட்டுமானப் பணியும் மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எடுத்துக்கூறி கர்நாடகா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம். அதோடு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று, அதிமுக எம்பிக்கள்தான்,  தொடர்ந்து குரல் கொடுத்து நாடாளுமன்றம் செயல்பட முடியாத நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கல்வி, தொழில்வளம், சுகாதாரம், மருத்துவம் என்று அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மீது ெபாய்யான வழக்குகளை போட்டு, எப்படியாவது மக்களை திசை திருப்ப வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் எதிர்கொள்வோம். என்மீது கூட வழக்கு போட்டார்கள். அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பழனிசாமி பேசினார்.

‘எந்த நேரமும் மக்கள் பார்க்கக்கூடிய ஒரே முதலமைச்சர் நான்தான்’

முதல்வர் பழனிசாமி பேசும்போது, `நேற்று முன்தினம் வரை என்னிடம் வந்த அனைத்து கோப்புகளிலும் கையெழுத்து ேபாட்டு, திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறேன். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருந்தாலும், எத்தனை முதலமைச்சர்கள் இருந்தாலும், எந்த நேரமும் மக்கள் பார்க்க கூடிய ஒரே முதலமைச்சர் நான்தான். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் வகையில் இந்த பொறுப்பை எனக்கு தந்து இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று சொன்னார்.

‘உண்மையான தொண்டர்கள் அதிமுகவில் தான் இருக்கின்றனர்’

சேலம் மாவட்டம் வீரகனூரில் நேற்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கட்சி உடையும், ஆட்சி கவிழும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் நடக்காது. வீண் பழி சுமத்தவே எங்கள் மீது ஊழல் புகார்கள் கூறப்படுகிறது. உண்மையான தொண்டர்கள் அனைவரும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள்.  செந்தில் பாலாஜி அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். இந்த கட்சியில் இருந்ததால்தான் சீட் கிடைத்து எம்எல்ஏவாகி போக்குவரத்து துறை அமைச்சராக உயர்ந்தார். அந்த நன்றியை மறந்து விட்டார். நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவர் சொன்ன குறளுக்கு இப்போது பொருத்தமாகி விட்டார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: