மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து கண்டன தீர்மானம் : புதுவை சட்டசபையில் நிறைவேறியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரியில்  சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅன்னான், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் ஆகியோர் மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைவரும் 2 நிமிட மவுன  அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மேகதாதுவில் புதிய அணை அமைப்பதற்கு  கண்டனம் தெரிவித்தல், அணை ஏதும் கட்டாமல் தடுத்தல் என்ற அரசின் தீர்மானத்தை  முதல்வர் நாராயணசாமி முன் மொழிந்து பேசுகையில், `காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின்  நடவடிக்கைகளுக்கு புதுச்சேரி சட்டசபை தனது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு  செய்கிறது. கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் தடை  விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபை  கேட்டுக்கொள்கிறது’ என்றார்.

இதன் மீது எம்எல்ஏக்களை பேசுமாறு சபாநாயகர் வைத்திலிங்கம் அழைப்பு விடுத்தார். அப்போது,  குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, `இந்த தீர்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சரியாகவே  இருக்கிறது. எனவே இதனை ஏக மனதாக எடுத்துக்கொண்டு இந்த தீர்மானத்தை  நிறைவேற்றலாம்’ என்றார். சபாநாயகர் வைத்திலிங்கம்: முதல்வர் முன்மொழிந்த அரசின் தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவரும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றுமாறு கூறிவிட்டார். எனவே ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார். அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர் அன்பழகன், நியமன உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர், தங்களுக்கும் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கூறினர்.

இதைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் பேசி முடித்ததும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாராயணசாமியை பெண் பார்க்க சொன்ன வாஜ்பாய்:

புதுச்சேரி சட்டசபையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ``எம்.பி.யாக பணியாற்றியபோது வாஜ்பாயுடன் பேசி, பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர், கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் சென்று பேசுவார். அனைவரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர். இந்த நேரத்தில் அவரைப்பற்றி ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நான் பணியாற்றியபோது, அவரிடம் நீங்கள் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை எனக்கேட்டேன், அதற்கு அவர்  நீ வேண்டுமானால் எனக்கு பெண் பார்த்து கொடு.. என்று நகைச்சுவையாக கூறினார்’’ என்று முதல்வர் குறிப்பிட்டார். இதனை கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: