×

பொதுத்துறை கம்பெனிகள் வட இந்தியர்கள்மயமாவது தொடர்ந்தால் சென்னை பெட்ரோலிய நிறுவனம் முற்றுகை : ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை, ‘தமிழ்நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், வட இந்தியர்கள்மயமாகப்படுவது தொடரும் பட்சத்தில், சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில், வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

அதன் பிறகு வட இந்தியர்கள் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். தற்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு வரை நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், அதன் பிறகு போட்டித்தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதில் முறைகேடு செய்து வட இந்தியர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

பீகார், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : companies ,siege ,North India ,Ramadoss ,Chennai Petroleum Institute , Chennai Petroleum Corporation, Siege, Ramadoss warning
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!