விவசாய நிலங்களை பறிக்க என்எல்சி நிர்வாகம் முயற்சி : டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனது 3வது சுரங்கப் பணிகளுக்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 40 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மக்களின் எதிர்ப்பை மீறி நடக்கும் இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே 2வது சுரங்கம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட சுமார் பத்தாயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அத்துடன், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வழங்கிய நிலத்திற்கு இழப்பீடும், வேலைவாய்ப்பும் கிடைக்காத அவல நிலையையும் அந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிதைக்கும் வகையில் மூன்றாவது சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்த முனைவது தவறான செயலாகும். இதற்காக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், புத்தூர், சிறுவரப்பூர், கோட்டிமுலை, பெருந்துறை, ஒட்டிமேடு, ஆதனூர், சின்னநெற்குணம், பெரிய நெற்குணம் உள்ளிட்ட நாற்பதுக்கும் அதிகமான கிராம மக்கள் தங்களின் விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த விரிவாக்க திட்டத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள சிறு ஆறுகளை இணைக்கும் திட்டமும் இயற்கைப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். எனவே, அவ்வளவாக அவசியப்படாத இந்த விரிவாக்கத் திட்டத்தை கைவிட்டு, புவனகிரி மற்றும் கம்மாபுரம் ஒன்றியப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: