புயல் நிவாரண பணிகளில் போர்க்கால வேகத்தில் ஈடுபடக்கோரி 18-ம்தேதி 1000 இடங்களில் உண்ணாவிரதம் : முத்தரசன் அறிவிப்பு

சென்னை: கஜா புயல் நிவாரண பணிகள் போர்க்கால வேகத்தில் நடக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆயிரம் இடங்களில் 18ம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கஜா புயல் தாக்கி ஒரு மாத காலமாகிவிட்டது. இயல்புநிலை இன்று வரை திரும்பவில்லை. நகரப் பகுதி உட்பட கிராமங்களுக்கும் முழுமையான மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.மாநில அரசு புயல் சேதம் குறித்து முழுவிவர அறிக்கையை அளித்துவிட்டதாக கூறுகின்றது. மத்திய அரசு, கோரிய விவரங்களை தமிழக அரசு அனுப்பாத காரணத்தால்தான் நாங்கள் நிதி அளிக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கிறது. இரு அரசுகளும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லியவாறு நாட்களை கடத்துகின்றன. மக்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை.

மாநில அரசு அறிவித்த நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அவநம்பிக்கையையே ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக விவசாயிகள் அதிர்ச்சி மரணத்திற்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், தமிழக அரசு கோரிய ₹15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கிடக் கோரியும், நிவாரணத் தொகைகளை அதிகரிப்பதுடன் அதை உடனடியாக வழங்கிடக் கோரியும் மக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியல், ஆர்ப்பாட்டம், மறியல் என போராடிக் கொண்டிருகிறார்கள். போராடும் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதிலும், கைது செய்வதிலுமே கவனம் செலுத்தி வருகிறது.

இந்த அடக்குமுறை செயலை வன்மையாக் கண்டிக்கிறோம். நிவாரணப் பணிகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி வரும் 18ம்தேதி  செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும், பொது இடங்களில் உண்ணாநிலை போராட்டம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் நடைபெறும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தால், அதனை மீறி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: