×

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது ... ரபேல் ஒப்பந்தத்துக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ரூ.58 ஆயிரம் கோடியில் ரபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ‘இந்த ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது’ எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசலாட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ₹58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2012ம் ஆண்டு இந்த விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டது. அப்போது, ஒரு விமானத்தின் விலை ₹560 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அதை மாற்றியமைத்த தற்போதைய மத்திய அரசு, ஒரு விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், இந்த விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பிரதமர் மோடி மீது  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாகவே குற்றம்சாட்டி வருகிறார். மேலும்,  பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

 இந்த விமான ஒப்பந்தத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் எம்எல்.சர்மா, வினீத் தாண்டா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் தெசின் பூனாவாலா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், ‘விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது. இதற்கிடையே, வழக்கு தொடர்ந்த தெசின் பூனாவாலா மட்டும் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த  வழக்கு கடந்த அக்டோபர் 10ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரும் வழக்கறிஞருமான எம்எல்.சர்மா முன்வைத்த வாதத்தில், “ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை முழுமையாக நாட்டு மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதால் ஒப்பந்தத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே.வேணுகோபால், ‘நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தம் ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்தது. எனவே, ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக கூற முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. மேலும், இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. இதில், தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது’ என வாதிட்டார்.

 பின்னர், ஒப்பந்த விவரங்களையும், விமானங்களின் விலை நிர்ணயம் பற்றி விவரங்களையும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த அக்டோபர் 27ம் மத்திய அரசு இவற்றை தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த விசாரணையின் போது விமானப்படை அதிகாரிகள் அனில் கோல்சா, சவுத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ரபேல் போர் விமானம் குறித்து நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 14ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.    இதையடுத்து, இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே.கவுல், கேஎம்.ஜோசப் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் கூறியதாவது:

 ரபேல் போர் விமானம் தொடர்பான விவகாரத்தில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முழுவதுமாக ஆராயப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இருப்பினும், எங்களால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால் முதலில் 126 விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டு பின்னர் 36 ஆக குறைக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை.ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்த நடைமுறை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியாக நடந்தத ஒன்றாகதான்  இருக்கிறது. அதனால், இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க முடியாது. மேலும், இந்த ஒப்பந்தம் பற்றி சிபிஐ விசாரிக்கவோ அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் தனி விசாரணை குழுவை ஏற்படுத்தவோ வேண்டிய அவசியமும் கிடையாது. இதைத்தவிர, இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதன்மூலம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Rafael fighter plane, contract, Supreme Court, is not banned
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...