ராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்தக்குளம் பிரதிஷ்டை: பக்தர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் 2ம் பிரகாரத்தில் இன்று அதிகாலை மகாலட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய தீர்த்தக்கிணற்றில் ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயில் 3ம்  பிரகாரத்தில் இருந்த தீர்த்தம் உட்பட 6 தீர்த்தங்கள், 2ம் பிரகாரத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்டன. இதில் 5 தீர்த்தங்கள் ஏற்கனவே பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் இன்று மகாலட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி இன்று அதிகாலை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் 2ம் கால யாக பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. பின்னர் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமி தீர்த்தம் கோயில் குருக்களால் ஊர்வலமாக 2ம் பிரகாரத்திற்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காலை 6.20 மணிக்கு 2ம் பிரகாரத்திற்குள் புதிதாக தோண்டப்பட்டிருந்த மகாலட்சுமி தீர்த்த கிணற்றில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கலசத்தில் இருந்த புனிதநீர் ஊற்றப்பட்டு சம்யோஜன தீர்த்தப்பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் குருக்கள் உதயகுமார், சர்வசாதகம் சிவமணி ஆகியோர் தீர்த்தப்பிரதிஷ்டை செய்து வைத்தனர். கோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகணன், மேனேஜர் முருகேசன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கண்ணன், கலைச்செல்வன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புதிய மகாலட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து காலை 7 மணி முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நீராடி கோயிலுக்குள் உள்ள மற்ற தீர்த்தக்கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 5 மணி முதல் கோயில் கிழக்கு பகுதியில் தீர்த்த டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தீர்த்தமாட டிக்கெட் வழங்கப்பட்டது. 2ம் பிரகாரத்தில் புதிய மகா லட்சுமி தீர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கிழக்கு பகுதி டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டு, கோயில் வடக்கு கோபுரம் நுழைவு வாயில் பகுதியில் தற்காலிக தீர்த்த டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வடக்கு ரத வீதி வழியாக வரிசையில் வந்து டிக்கெட் பெற்று மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: