டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அப்ரூவர்

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அப்ரூவராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.ஏ.புரத்தை சேர்ந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் கடந்த 2013ம் ஆண்டு கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், உயர் நீதிமன்ற வக்கீல்கள் பாசில்,  வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாசில், வில்லியம், ஏசுராஜன் ஆகியோர் சாட்சிகளை மிரட்டுவதாக புகார் எழுந்தது. அதன்படி நீதிமன்றம் அவர்களின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைத்தது.

இதுவரை இந்த வழக்கில் 11 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நெல்லை மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவர் அப்ரூவராக மாறி உள்ளார். அவர் சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள 10 கோடி மதிப்புள்ள நிலம் விவகாரத்தில் டாக்டர் சுப்பையா பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே சுப்பையாவை கொலை செய்ய வேண்டும். என்று பொன்னுசாமி குடும்பத்தினர் கூறி வந்தனர்.

மேலும் எனக்கு கொலையை செய்து முடிக்க 50 லட்சமும், வெளிநாட்டில் வேலையும் வாங்கி தருவதாகவும், அதை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடலாம் என்றும் தெரிவித்தனர். அதன்படி முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருடன் கூலிப்படையை தயார் செய்துகொண்டு நான் சென்றேன். சம்பவம் நடந்த அன்று, அவர்கள் இருவரும் டாக்டர் சுப்பையாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். நான், காருக்கு பின்னால் மோட்டர் சைக்கிள் வைத்துகொண்டு தயாராக இருந்தேன். அவர்கள் கொலை செய்து முடித்தவுடன் நான் தான் அவர்களை அழைத்து சென்றேன். நடந்த உண்மையை நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து, குற்ற உணர்ச்சியால் தவித்து வந்தேன். மேலும் உயிரை காப்பாற்றும் டாக்டரை பணத்துக்காக கொலை செய்து விட்டோம் என்று எனது மனசாட்சி உறுத்தி கொண்டே இருந்தது. இதனால், நானாக முன்வந்து இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான குறுக்கு விசாரணைக்காக வழக்கு வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: