நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன-வின் உத்தரவு செல்லாது : இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. அப்படி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே அதிபர் தன்னிச்சையாக செயல்பட்டு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்றும் அந்நாட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கை உச்சநீதிமன்றத்தி்ன் 7 நீதிபதிகள் கொண்ட அமைப்பு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். 7 நீதிபதிகளும் கருத்து வேறுபாடின்றி ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

முன்னதாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேன. ஆனால் அவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிட்டவில்லை. இதனால் அங்கு கடும் அரசியல் குழப்பம் மற்றும் நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறசேன கடந்த நவம்பர் 9-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். நவம்பர் 12-ம் தேதி இதனை எதிர்த்து 13 அமைப்புகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

நாடாளுமன்ற கலைப்புக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: