×

மிசோரம் மாநில முதலமைச்சராக பதவியேற்க சோரம் தங்காவிற்கு ஆளுநர் அழைப்பு

அய்சால்: மிசோரம் மாநில முதலமைச்சராக சோரம் தங்கா நாளை மறுதினம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேறார். இதனை தொடர்ந்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 37.6% வாக்குகளுடன் 26 இடங்களில் வெற்றி பெற்றது.

பத்து ஆண்டுகளாக மிசோரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான சோரம் தங்கா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜசேகரன் ஆட்சியமைக்க வருமாறு சோரம் தங்காவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து புதிய முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் நாளை மறுதினம் நண்பகல் 12 மணிக்கு சோரம் தங்கா பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,state ,Mizoram ,chief minister , Mizoram,swearing,sarang tanga,governor,call
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...