×

சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் கஞ்சா சாகுபடியை கண்டறிய டிரோன் கேமரா மூலம் சோதனை

ஜோலார்பேட்டை:  ஏலகிரி மலையில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என்று டிரோன் கேமரா மூலம் வேலூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு 3 டிஎஸ்பிக்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறதா என்று சோதனை நடத்த எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் பி.கீதா, ஜூலியர் சீசர், மார்டின் ராபர்ட் ஆகியோர் தலைமையில் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர், நிலாவூர், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஊடுபயிருடன் கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறதா என டிரோன் கேமரா மூலம் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் வனத்துறையினர், வருவாய்துறையினர், உள்ளூர் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி கீதா கூறுகையில், போதைப் பொருளான கஞ்சா பெரும்பாலும் மலைப் பகுதிகளில் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் தற்போது ஏலகிரி மலை பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது ஊடுபயிருடன் கஞ்சா சாகுபடி செய்கிறார்களா? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.

அதில் எதுவும் புலப்படவில்லை. மேலும் இந்த பகுதியில் கஞ்சா சாகுபடி செய்வது சட்டத்திற்கு விரோதமானது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதிகளில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார். அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்ஐ நாமதேவர் உட்பட பலர் உடனிருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hills ,Yelagiri , Yelagiri Mountain, Ganja, drone camera
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...