×

அரசு நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே சொந்த செலவில் ரேஷன் கடையை சீரமைக்கும் மக்கள்

களக்காடு: களக்காடு அருகே உள்ளது கீழப்பத்தை. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேஷன் கடையில் 700க்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ளன. ரேஷன் கடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால், கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன. தரை தளங்களும் உடைந்து பெயர்ந்து கிடந்தன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் காட்சி அளித்ததால் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு அச்சத்துடனே சென்று வந்தனர்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டிடம் மூடப்பட்டது. தற்போது வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை நடந்து வருகிறது. இதுவரை, 4 இடங்களுக்கு கடை மாற்றப்பட்டது. வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களும் போதிய வசதிகள் இன்றி சிரமப்பட்டு வந்தனர். எனவே பழுதடைந்துள்ள ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் என்று கீழப்பத்தை பகுதி கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்து வந்தனர். இருப்பினும் கட்டிடம் சீரமைக்கப்படாமல் மூடியே கிடந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேர்ந்து தாங்களே ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்களே வீடு வீடாக நிதி வசூல் செய்து, தங்களது சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து வருகின்றனர். சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பணிகள் முடிவடைந்ததும், மீண்டும் புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கும் என்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkad, ration shops, people
× RELATED ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு ஏட்டு தற்கொலை