இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி: பிரதமராக நியமிக்க சிறிசேனா மறுப்பு

கொழும்பு: இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா கடந்த அக்டோபர் 26ம் தேதி நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அவர் புதிய பிரதமராக நியமித்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 எம்.பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால், அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியவில்லை.  இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ராஜபக்சே பிரதமராக செயல்படவும், இலங்கை நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தடை விதித்தது. இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த வாரம் விடுத்த அறிக்கையில், ‘அரசியல் குழப்பம் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்காது’ என்றார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று கூடியது.

ஐக்கிய தேசிய கட்சி எம்பி சாஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். தமிழ் தேசிய கூட்டணி ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தது. சிறிசேனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜேவிபி கட்சி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சிறிசேனா மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் கடந்த மாதம் 17ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர்.

இதனால், ரணிலுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இது அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து, ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சாஜித் பிரமேதாசா வலியுறுத்தினார். ஆனால், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ரணிலை பிரதமராக நியமிக்க சிறிசேனா மறுத்து விட்டார். இதனால், நாடாளுமன்றத்தை வரும் 18ம் தேதி வரை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்தார்.  இருப்பினும், ரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர சிறிசேனாவுக்கு இப்போது வேறு வழியில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: