அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிவறை வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிவறை செய்து தரப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே நாள் ஒன்றுக்கு 1300 ரயில்களை இயக்கி வருகிறது. வருடத்திற்கு 800 மில்லியன் பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. அதன்படி, சுத்தமான ரயில் நிலையம் என்ற திட்டம் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கழிவறைகள் மற்றும் நடைபாதைகள் நவீன இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் நாள் ஒன்றுக்கு 225 ரயில் பெட்டிகளும், எழும்பூரில் 185 ரயில் பெட்டிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. சோரனூர் மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்த பட உள்ளது. 73 முக்கிய ரயில் நிலையங்களை துய்மை செய்யும் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் போது ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்த கோச் மித்ரா திட்டம் 102 ரயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணத்தின் போது குடிநீர் வசதி, சிறு புகார்கள், மின்சாரம் தொடர்பான புகார்கள் சரி செய்யப்படுகின்றன. பயணிகள் தங்களை புகார்களை 98217 36069 என்ற எண்ணுக்கு  குறுஞ்செய்தியாக அனுப்பலாம். ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் போர்வைகள் தூய்மைப்படுத்த பேசின் பாலம் மற்றும் கொச்சுவேலி ஆகிய இரண்டு இடங்களில் சலவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் போர்வைகள் சலவை செய்யப்படுகின்றன. இதேபோன்று மதுரை, கோவை, மங்களூரூ, நாகர்கோவில், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் சலவை நிலையங்கள்  விரைவில் அமைக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வேயில் உள்ள 6603  ரயில் பெட்டிகளில் 5443 பெட்டிகளில் பயோ கழிவறைகள்  அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள கழிவறைகள் ஜூன் 2019க்குள் பயோ கழிவறைகளாக மாற்றப்படும். மேலும் ராமேஸ்வரம் - மானாமதுரை, திருச்சி - மானாமதுரை, மதுரை - மானாமதுரை, விருதுநகர் - மானாமதுரை உள்ளிட்ட  பசுமை வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயோ கழிவறை வசதி செய்யப்பட உள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: