அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் திறந்தவெளியில் துணை மின் நிலையம்

அம்பத்தூர்: அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிக்குப்பம் பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையோரம், கள்ளிக்குப்பம் பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு 33 கே.வி துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து அம்பத்தூர் பகுதிகளான விஜயலட்சுமிபுரம், ராம்நகர், வெங்கடாபுரம், மேனாம்பேடு, ஞானமூர்த்தி நகர், கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், பாலாஜி நகர் உள்பட பல பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்துக்கு பல ஆண்டாக சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு வேலி அமைத்திருந்தனர். அதுவும் துருப்பிடித்து சேதமாகிவிட்டது. தற்போது, மின் நிலையத்துக்கு தடுப்பு வேலி இல்லாமல் திறந்த வெளியில் எவ்வித பாதுகாப்பும் இன்றி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கள்ளிக்குப்பதில் உள்ள துணை மின் நிலையம் அருகில் பள்ளிகள், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் மின் நிலையத்தை கடந்து செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது. மேலும் சிறுவர், சிறுமிகள் சிலர் வண்ணத்து பூச்சிகளை பிடிக்க மின் நிலையத்துக்குள் விளையாட்டாக சென்று விடுகின்றனர். இதனால் உயிர் பலி ஏற்படும் அபாய நிலை உள்ளது. அதேபோல், அந்த வழியாக மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் மின் நிலையத்துக்குள் நுழைந்து விடுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த மின்நிலையம் அமைந்துள்ளதால் வேகமாக வரும் வாகனங்கள் சற்று நிலைதடுமாறினாலும் உள்ளே புகுந்து விபத்தில் சிக்கும் நிலையாக இருக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் திறந்த வெளியில் உள்ள துணை மின் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: