தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு

சென்னை: தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பேசியதாக  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரமணியில் 2016 மார்ச் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சியை சமீபத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்  ராஜ்குமார்  யூடியூபில் பார்த்துள்ளார். இரு சமூகத்தினரிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் சீமான் பேசியதாக கருதிய அவர் இதுகுறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில்  வழக்கறிஞர் ராஜ்குமார் புகார் அளித்தார்.

புகார் ஆணையர் அலுவலகத்திலிருந்து தரமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டது. தரமணி போலீஸார் யூடியூபைப் பார்த்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று  சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு  153 (1)(a) - ன் (இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் பேசுதல்) கீழ் நேற்றிரவு வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கெனவே சீமான் மீது தரமணி காவல் நிலையத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக எழுந்த புகாரின் கீழ் பிரிவு 153 ( வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது), 153(A) (சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது) ,505(1)(a)(b) ( பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பேசுவது), 504 (பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது), 505(1)(a)(c) (தவறான வதந்திகளைப் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) and 505 (ii) (சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவது)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: