வேதாரண்யத்தில் 26 நாட்களாக புயலால் உப்பளங்களில் கடல் சேறு தேக்கம் : 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

வேதாரண்யம்: கஜா புயலால் வேதாரண்யம் உப்பளங்களில் கடல் சேறு, மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கஜா புயலினால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிசை  வீடுகள், ஓட்டு வீடுகள் உள்பட பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. அதேபோல  லட்சக்கணக்கான தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன.  ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்தன. வேதாரண்யம்  வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த  புயலினால் மின்சாரமும் தடைபட்டது. இந்தியாவில் அதிகமாக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் 35 ஆயிரம்  ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 6 மாத காலம் உப்பு உற்பத்தி நடைபெறும்.மழை காலங்களில் மட்டும் உப்பு உற்பத்தி  செய்யும் பணிகள் நடைபெறாது. இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும்,  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயலினால்  உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் மட்டும் 1 லட்சம்  டன் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல்நீர் உட்புகுந்து  உப்பளங்களும் சேதமடைந்தன. உப்பளங்களில் இருந்த கிணறுகள், மோட்டார்கள்  பாதிக்கப்பட்டன. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புயலுக்கு  முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை உற்பத்தியாளர்கள் தங்களின்  இடங்களுக்கு அருகிலேயே மலைபோல் குவித்து வைத்திருந்தனர். மழையினால்  சேதமடையாமல் இருப்பதற்காக உப்பு குவியல்கள் மீது பனை ஓலைகள் மற்றும்  தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்து வைத்திருந்தனர்.

ஆனால் கஜா புயல்  மற்றும் மழையால் உப்பு சேதமடைந்து தண்ணீரில் கரைந்தன. பல இடங்களில் உப்பு  குவியல்கள் மீது போடப்பட்டிருந்த தார்ப்பாய்கள், பனை ஓலைகள் புயலுக்கு  தூக்கி வீசப்பட்டன. தற்போது வெயில் அடிப்பதால் உப்பு  உற்பத்தியாளர்கள் புயலுக்கு முன்பு சேகரித்து வைத்து இருந்த உப்பை  வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தொழிலாளர்கள் மூலம் உப்புகள், சாக்கு  மூட்டைகள் மற்றும் சிறிய பாக்கெட்டுகளில் உப்பை அடைக்கும் பணி அகஸ்தியன்பள்ளி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு குவியல்களிலும் பல்வேறு தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அடைக்கப்பட்ட உப்புகள், லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியூர் மற்றும்  வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த புயலினால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கடல்நீர் உட்புகுந்து உப்பளங்களிலும்  26 நாட்களாக மழை நீர், சேறு தேங்கி காணப்படுகிறது. இதனை அகற்றுவதற்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகும்  என்று கூறப்படுகிறது. எனவே உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: