கந்துவட்டி கொடுமை தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை: லாட்ஜில் 3 பேர் குறித்து பரபரப்பு கடிதம் சிக்கியது

சென்னை: கடனுக்காக பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததால் விரக்தியடைந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியுடன் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை செனாய்நகர் வெங்கடாசலபதி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (50). தொழிலதிபரான இவர், மணலியில் அலுமினியம் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு உமா (38) என்ற மனைவியும் தருண் என்ற மகன், கீர்த்தி ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளனர். மகன் தருண் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். மகள் கீர்த்தி ஐஸ்வர்யா  தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.

கிருஷ்ணவேல் நடத்தி வந்த தொழிலில் கடும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தொழில் வளர்ச்சிக்காக மணலியில் மனைவி உமா பெயரில் உள்ள பல கோடி மதிப்புள்ள இடத்தை அடமானம் வைத்து 3 பேரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு சரியாக வட்டி கட்ட முடியாமல் கிருஷ்ணவேல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே கடன் கொடுத்த நபர்கள் பணம் கேட்டு தொந்தரவு ெசய்துள்ளனர்.ஒரு கட்டத்தில் கிருஷ்ணவேல் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பணம் கொடுத்த 3 நபர்கள் அடமானமாக வைத்த பல கோடி மதிப்புள்ள சொத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேல் வெளியில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது மனைவி உமா மற்றும் மகள் கீர்த்தி ஐஸ்வர்யா உடன் நேற்று அதிகாலை 4 மணிக்கு எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் விரிவாக்கம் பணி நடைபெறுவதால் எனது குடும்பத்துடன் தங்க வேண்டும் என்று கூறி 206ம் எண் அறையை எடுத்து தங்கினார். அதிகாலை என்பதால் அறைக்கு வந்த உடன் மகள் கீர்த்தி ஐஸ்வர்யா தூங்கி விட்டார். மனமுடைந்த நிலையில் இருந்த கிருஷ்ணவேல் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் ஏற்கனவே தயாராக கொண்டு வந்த விஷத்தை இருவரும் குடித்துள்ளனர். சற்று நேரத்தில் இருவரும் மயங்கிவிட்டனர். காலை 6.30 மணிக்கு கீர்த்தி ஐஸ்வர்யா எழுந்துபார்த்தபோது தனது  அம்மா கை மற்றும் கால்கள் இழுத்தப்படி வாயில் நுரைத்தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கிருஷ்ணவேல் எந்த அசைவுமின்றி கிடந்தார்.

இதை பார்த்த ஐஸ்வர்யா விடுதியில் உள்ள ஊழியர்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே விடுதி ஊழியர்கள் ஓடி வந்து உமாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து எழும்பூர் போலீசார் தனியார் விடுதியில் இறந்த தொழிலதிபர் கிருஷ்ணவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் போலீசார் சோதனை செய்தபோது கிருஷ்ணவேல் இறப்பதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் “ திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தேன். அப்போது திருவொற்றியூர் பகுதியில் தங்கி சிறு சிறு வியாபாரம் செய்து மணலியில் அலுமினியம் ெதாழிற்சாலை அமைக்கும் அளவுக்கு வளர்ந்தேன். பின்னர் தொழிலில் ஏற்பட்ட இழப்பால் நான் தொழில் ரீதியாக பழக்கம் உள்ள சத்யசீலன், ஜெயசீலன், வெங்கடேசன் ஆகியோரிடம் பெரிய தொகை கடனாக வாங்கினேன். வாங்கிய பணத்திற்கு முறையாக வட்டி கொடுத்து வந்தேன். பணம் வாங்க அடமானமாக வைத்த பல கோடி மதிப்புள்ள எனது மனைவி பெயரில் உள்ள சொத்தை 3  பேரும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டனர். எனது பிள்ளைகளுக்காக வாங்கப்பட்ட சொத்தை அவர்கள் அபகரித்துவிட்டனர்.

இதனால் நான் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். வேறு வழியின்றி எனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். அதன்படி தான் எனது மகள் மற்றும் மனைவியுடன் லாட்ஜிக்கு வந்து விஷம் குடிக்க முடிவு செய்தேன். அதன்படி நாங்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை ெசய்து கொள்கிறோம். எங்கள் தற்கொலைக்கு மூன்று பேர் தான் காரணம்.”  இவ்வாறு தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் இருந்ததாக  போலீசார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தொழிலதிபர் கிருஷ்ணவேல் எழுதிய கடிதத்தின்படி, சம்பந்தப்பட்ட சத்யசீலன், ஜெயசீலன், வெங்கடேசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணவேல் கந்து வட்டி காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: