போலீசார் தீவிர கண்காணிப்பு தமிழக எல்லையில் மீண்டும் மாவோயிஸ்ட் நடமாட்டம் : வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதி

பந்தலூர்:  நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்த தமிழக, கேரள போலீசார் வன கிராமங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த மாதத்தில் 3 முறை மலப்புரம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் வன கிராமங்களுக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வைகடவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அலக்கல் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று மாவோயிஸ்ட்கள் சீருடை அணிந்து துப்பாக்கியுடன் சென்று மக்களை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் கிராம மக்களிடம் இருந்து உணவு பொருட்களை பெற்று சென்றதாக கேரள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கேரள தண்டர்போல்ட் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக - கேரள  எல்லையில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் நடந்துள்ளதால்    தமிழக போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் வனப்பகுதியை ஒட்டிய காவல்நிலையங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: