×

மும்பை நரிமன் பாயின்டில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தை விற்க டெண்டர் : 2 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு

மும்பை: மும்பை நரிமன் பாயின்டில் உள்ள 23 மாடி கொண்ட ஏர் இந்தியா கட்டிடத்தை விற்பனை செய்ய ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிதிச்சிக்கலில் இருந்து விடுபட இதனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்த கடனுக்கு வட்டியாக ஆண்டுக்கு 4,400 கோடியை  செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதையடுத்து கடனை குறைக்க நிதியுதவி செய்யுமாறு மத்திய அரசிடம் ஏர் இந்தியா கேட்டுள்ளது. மத்திய அரசு 29 ஆயிரம் கோடி தர சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிதி விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தால் உருவாக்கப்படும் புதிய கம்பெனியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். ‘ஏர் இந்தியா சொத்து பராமரிப்பு’ நிறுவனம் என்று அந்நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏர் இந்தியாவிற்கு நாடு முழுவதும் இருக்கும் சொத்து மற்றும் நிலத்தை விற்பனை செய்து நிதி திரட்டும். அந்த நிதியை கொண்டு கடன் அடைக்கப்படும். அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 70 குடியிருப்புகள் மற்றும் வர்த்தக வளாகங்களை விற்பனை செய்ய கடந்த மாதம்தான் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில், நரிமன் பாயின்டில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தை விற்பனை செய்யவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மொத்தம் 23 மாடிகள் கொண்டதாகும். இதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு ஆண்டுக்கு 107 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் இப்போது இதையும் விற்பனை செய்து ₹2 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த கட்டிடத்தை வாங்க அரசு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் கொடுக்க முடியும். கட்டிடத்தின் 22வது மாடியை ஏர் இந்தியா நிர்வாகம் தனது சொந்த தேவைக்கு வைத்துக்கொள்ளும். அதோடு கட்டிடத்தின் மேல் ஏர் இந்தியா சின்னம் அப்படியே இருக்கவேண்டும் என்றும், கட்டிடத்தின் பெயரை மாற்றக்கூடாது என்பன உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air India ,Nariman Point ,building ,Mumbai , Tender to sell , 2,000 crore fund , Air India building , Nariman Point, Mumbai
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...