சுகாதாரத்துறை உத்தரவு மருத்துவ ஊழியர் குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனைகளில் காப்பகம்

கோவை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பலர் தங்களின் குழந்தைகளை வீட்டில் விட்டு பணிக்கு வரும் நிலை இருக்கிறது. காலை முதல் பணியில் இருப்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாத நிலையும் உள்ளது. இந்நிலையில், தேசிய சுகாதார குழுமம்(என்எச்எம்) அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் குழந்தைகளுக்கு என தனியாக காப்பகம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட மருத்துவமனை என மொத்தம் 53 அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களுக்கான குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படுகிறது. இதனை முதல் தளத்தில் அமைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான வகையில் காப்பகத்தின் பில்டிங் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காப்பகம் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை செயல்படும். இதில், நர்சுகள், மருத்துவர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பணியின்போது தங்களின் குழந்தைகளை காப்பகத்தில் வைத்து கொள்ள அனுமதிக்கப்படும். காப்பகத்தின் பாதுகாவலர் நியமிக்கப்பட்டு குழந்தைகளை பராமரிக்கும் பணியை மேற்கொள்வார்கள். மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை மருத்துவ கல்லூரியின் டீன், இணை இயக்குனர், மகப்பேறு துறைத்தலைவர், குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர், இருப்பிட மருத்துவ அலுவலர்கள் நிர்வகிப்பார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: