கேரள மருத்துவ கழிவுகளை கொட்ட தடை கோரி வழக்கு: நெல்லை கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை: கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லையில் கொட்டுவதற்கு தடைகோரிய வழக்கில், அரசு தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர், நெல்லை கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழக இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க துணைத்தலைவர் சிதம்பரம் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து நெல்லை மாவட்டம் புளியங்குடி, சொக்கம்பட்டி கிராமங்களில் கொட்டி வருகின்றனர். மருத்துவக்கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால் சிறுவர்கள், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது. மருத்துவ கழிவுகளில், மனிதர்கள் அல்லது விலங்குகளின் நோய் தடுப்பு உபகரணங்கள், மருத்துவ ஆராய்ச்சி பொருட்கள், பரிசோதனை பொருள்கள், மனித உடற்கூறியல் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள், கால்நடைகளில் இருந்து ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட விலங்கு கழிவுகள், மைக்ரோபையாலஜி மற்றும் பயோடெக்னாலஜி கழிவுகள், ஊசிகள், மருத்துவ கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றை முறையாக மருத்துவ விதிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் திறந்தவெளியில் எங்கள் கிராமத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்குகிறது. நெல்லை மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இவற்றை உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கையாளுவதால் துப்புரவு பணியாளர்களுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், நவ. 12ல் கேரளாவில் இருந்து செங்கோட்டை வழியாக புளியங்குடி கிராமத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன.மேலும் நவ. 21ல், 27 லாரிகளில் நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இவ்வாறு திறந்தவெளியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவது மருத்துவம் மேம்படுத்துதல் மற்றும் கையாளுதல் விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே கேரள மருத்துவ கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர், அரசு தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர், நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: