3 மாநில தேர்தல் வெற்றி மக்களவை தேர்தல் மெகா கூட்டணிக்கு உறுதுணையாக இருக்கும்: அரசியல் நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: சட்டீஸ்கர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி வரும் மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க காங்கிரசுக்கு உதவும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில்  தற்போது அவர் தலைமையிலான காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் மொத்தமுள்ள 65 எம்பி தொகுதிகளில் 62 இடங்களை பாஜ  வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் அந்த 3 மாநிலங்களில் பாஜ பின்னடைவை சந்தித்துள்ளது.

 இது தொடர்பாக அரசியல் நிபுணரான டெல்லி பல்கலைக்கழகத்தின் ஏசு மேரி கல்லூரி பேராசிரியர் சுசிலா ராமசாமி கூறியதாவது:  சிறந்த தலைவர் என்பவர் முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.  பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும். ராகுல்காந்தி முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளார். 3 மாநில தேர்தல் வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக  உள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற ஒரு ஆண்டு நிறைவு நாளில் கிடைத்துள்ள இந்த வெற்றி எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து மக்களவை தேர்தலை சந்திக்க மிக உதவியாக இருக்கும். ராகுலுக்கு உண்மையான  சோதனை அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலாக இருக்கும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல் அரசியல் ஆய்வாளரான மணீஷா பிரியம் கூறியதாவது: இந்த தேர்தலில் ராகுலின் செயல்பாடு சிறப்பானதாக இருந்தது.  அவர் மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் மேலும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். இந்த  வெற்றி எதிர்க்கட்சிகளை அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு தயார் படுத்துவதாக அமைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: