தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக வெற்றிக்கணக்கை தொடங்கியது காங்கிரஸ்: தலைவர்கள், தொண்டர்கள் உற்சாகம்

சென்னை: காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாக தோல்வி முகத்தில் இருந்த நிலைமாறி வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளதால், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா மற்றும் ராகுல் காந்தி இருந்தபோது இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வந்தது. இது முக்கியமாக ராகுல்  காந்திக்கு மிகவும் பின்னடைவாக கருதப்பட்டது.அதேநேரம் பாஜ முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2013ம் ஆண்டு முதல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பிரசார வியூகம் வகுக்கப்பட்டது. இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. 2013ம் ஆண்டு  மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றது.

2014ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக மோடியை முன்னிறுத்திய பாஜ கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. மோடி பிரதமரான பிறகு நடைபெற்ற அனைத்து  மாநில தேர்தல்களிலும் பாஜ அமோக வெற்றி பெற்றது. இதுபற்றி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறுகையில், `இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜ ஆட்சி அமையும்’’ என்றார். அதன்படியே அனைத்து  மாநிலங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது.ஆனால், சமீபகாலமாக பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இரவோடு இரவாக செல்லாது என அறிவித்தது, பெட்ரோல் விலை உயர்வு,  அதிகப்படியான வரி (ஜிஎஸ்டி) வசூலிப்பது, மோடியின் தொடர் வெளிநாட்டு பயணம், வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திரும்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறி விடுவது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி  செய்ய மறுத்தது உள்ளிட்ட பிரச்னைகளால் பாஜக மற்றும் மோடியின் செல்வாக்கு சரிய தொடங்கியது.

இதை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பிரசாரம் மூலம் நாட்டு மக்களுக்கு எடுத்து கூறினார். குறிப்பாக இந்திய ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானம் வாங்கியதில் பெரிய அளவில்  முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி ஆதாரத்தோடு குற்றம் சாட்டினார். மேலும், இந்தியாவில் உள்ள பெரிய பிரச்னைகளுக்கு மோடி நேரடியாக பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பதும் குற்றச்சாட்டாக கூறப்பட்டது.இதுபோன்ற நடவடிக்கையால் படிப்படியாக மோடி செல்வாக்கு குறைந்து, காங்கிரஸ் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. ஆனால், இது வாக்குகளாக மாறுமா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் குஜராத், பஞ்சாப் மாநில தேர்தல்  நடந்தபோது இது ஓரளவு காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. குஜராத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைந்தது. அதேநேரம் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தோல்வி  அடைந்தாலும், பாஜக ஆட்சி அமைக்கவிடாமல் காங்கிரஸ் தலைவர்கள் திறமையாக செயல்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுபோன்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் முடிவுதான், வருகிற 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதினர். அதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டனர். அதன்படி, நேற்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த 3 மாநிலத்தில்  தற்போது பாஜ ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தல் முடிவு பாஜகவுக்கு  மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும். இதன்மூலம், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றி கணக்கை தொடங்கி  விட்டதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கூறுகிறார்கள். இந்த வெற்றியின் மூலம் வருகிற 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைந்து  காங்கிரஸ் வெற்றிபெறும் என்றே அரசியல் நிபுணர்களும் கருதுகிறார்கள்.

எத்தனை மாநிலங்களில் பாஜ ஆட்சி

தற்போது, குஜராத், கோவா, உத்தரப்பிரதேசம், அரியானா, உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜ தனித்து ஆட்சி செய்து வருகிறது. மேலும், மகாராஷ்டிரா, பீகார், அசாம்,  அருணாசலப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜ ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் சிக்கிம், மேகாலயா, நாகலாந்து. ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பாஜ  ஆதரவு கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார். ஜம்மு-காஷ்மீரில் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜ, ஆட்சியை கலைத்து விட்டது.  இதனால் தற்போது 16 மாநிலங்களில் மட்டுமே பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன.

அதேநேரம், காங்கிரஸ் கட்சி கர்நாடகா (கூட்டணி), பஞ்சாப், புதுவை ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் காங்கிரஸ்  6 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.அதேநேரத்தில் தெலுங்குதேசம் (ஆந்திரா), திரிணாமுல் (மேற்கு வங்கம்), ஆம் ஆத்மி பார்ட்டி (டெல்லி) ஆகிய கட்சிகள் தற்போது காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளன. அதைத் தவிர கேரளா (மார்க்சிஸ்ட்), ஒடிசா (பிஜூ ஜனதா  தளம்), தமிழ்நாடு (அதிமுக), தெலங்கானா (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகள் தனித்து செயல்பட்டு வருகின்றன.

* 5 மாநிலங்களிலும் மொத்தம் 678 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

* மொத்தம் 8,500 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

* 1.74 லட்சத்திற்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, 670 பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

* சட்டீஸ்கரில் 2 கட்டமாக நவ.12ம் தேதி 18 தொகுதிகளுக்கும், நவ.20ம் தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

* மபியில் 230 தொகுதிக்கும், மிசோரமில் 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது.

* ராஜஸ்தானில் 199 தொகுதிக்கும், தெலங்கானாவில் 119 தொகுதிக்கும் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் காலமானதால், ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல்  நடக்கவில்லை.

* மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியும், சட்டீஸ்கரில் பாஜ ஆட்சியும் கவிழ்ந்த நிலையில், முறையே அம்மாநில முதல்வர்கள் தன்ஹவ்லா, ராமன் சிங் நேற்று பதவி விலகினர். ராஜினாமா கடிதத்தை அவர்கள் ஆளுநரிடம்  கொடுத்தனர்.

வடகிழக்கில் ஒரே மாநிலத்தை இழந்தது காங்கிரஸ்

வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொன்றாக பாஜ.விடம் இழந்துவந்த காங்கிரஸ், கடைசியாக மிஜோராமில் மட்டும் ஆட்சியில் இருந்தது. இம்முறை நடந்த தேர்தலில், அது மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணியிடம்  ஆட்சியை இழந்தது. மிசோரமில் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஆட்சி மாற்றம் நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தற்போது தோல்வி அடைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: