மெகா கூட்டணி, பாஜவை வீழ்த்தி டிஆர்எஸ் ஆட்சியை பிடித்தது எப்படி?

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், பதவிக்காலம் முடியும் முன்பாகவே ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்திக்க முன்வந்தார். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவுக்கு  போட்டியாக ஆந்திர முதல்வரான தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மெகா கூட்டணி அமைத்தார். தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஓரணியில் இணைந்தன. பாஜ தனித்து போட்டியிட்டது. மும்முனை  போட்டியால், தெலங்கானாவில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில் சூறாவளியாக சுற்றிய சந்திரசேகர ராவ் மிக எளிதாக அமோக வெற்றி பெற்று விட்டார். அவரது வெற்றிக்கு காரணம், டிஆர்எஸ் கட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்தான். விவசாயிகளுக்கு  குறைந்தபட்ச ஆதரவு விலை, நேரடி மானியம் போன்ற பழைய திட்டங்களை நம்பிக்கொண்டிருக்காமல், நேரடியாக பணமாக வழங்கினார்.

ஆண்டின் ரபி, காரிப் இரு பருவத்திற்கும் ஒரு ஏக்கருக்கு தலா ₹4,000 பணம்  வழங்கினார். அதாவது ஒரு விவசாயியிடம் 5 ஏக்கர் நிலம் இருந்தால், இரு பருவத்திற்கும் சேர்த்து ஆண்டுக்கு ₹40,000 அரசு நிதி உதவி கிடைத்துவிடும். அதுவும், பயிரிடுவதற்கு முன்பாகவே. இது விவசாயிகளுக்கும் பெரும்  நிம்மதியை அளித்தது. அதேபோல, கல்யாண் லட்சுமி மற்றும் ஷாதி முபாரக் திட்டத்தின் மூலம் பெண்களின் திருமணத்திற்காக ரூ.1 லட்சம் நிதியை அரசே வழங்கியது. இது பெற்றோரின் சுமையை வெகுவாக குறைத்தது.  முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கு நேரடி பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடியைப் போலவே, வீடு திட்டத்தையும் சந்திரசேகர ராவ் கொண்டு வந்தார். ஆனால், ஏழைகளுக்கு 2 படுக்கை  அறை கொண்டு வீடு வழங்குவதாக அறிவித்தது மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டாலும், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதே போல 24 மணி நேரம் மின்சாரம், குடிநீர் வழங்குவதையும் உறுதி செய்துள்ளார். விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச  மின்சாரம் வழங்கி உள்ளார். இதுபோன்ற திட்டங்களே பலமான எதிர்க்கட்சிகளையும் வீழ்த்தி, தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.

50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வந்தெரு  பிரதாப் ரெட்டியை அவர் வீழ்த்தினார். சந்திரசேகர ராவ் 1,25,444 ஓட்டுக்களும், வந்தெரு பிரதாப் ரெட்டி 67354 ஓட்டுக்களும் பெற்றனர்.சச்சின் பைலட் அமோகம்ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு மறைமுகமாக முன்னிறுத்தப்பட்டவரான சச்சின் பைலட் (41), தான் போட்டியிட்ட டோங் தொகுதியில், பாஜ சார்பில் மாநிலத்தில் நிறுத்தப்பட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரான யூனுஷ் கானை  54,179 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

5 மாநில தேர்தல்கள் முடிவு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘பாஜ கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பதைத்தான் இந்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.  அவர்கள் மாற்றத்தை நோக்கியுள்ளனர். பாஜ.விற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க 5 மாநில தேர்தல் முடிவுகள் வழிவகை செய்யும்” என்றார்.

இதற்கிடையே, தெலங்கானாவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவிற்கு, சந்திரபாபு நாயுடு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘விவிபிடி சீட்டை எண்ண வேண்டும்’

* தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில்,  ‘‘தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருக்கும் என்று நம்புகிறோம். இதனால், வாக்களித்த பின்னர் அதை உறுதி செய்வதற்காக அளிக்கப்படும் சீட்டை எண்ண உத்தரவிட  வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இதை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

* தெலங்கானாவில் உள்ள சந்திராயன் கட்டா தொகுதியில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அக்பருதீன் ஓவைசி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவர் ஐந்தாவது முறையாக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது. தனக்கு  அடுத்தபடியாக வந்த பாஜ வேட்பாளர் சையத் ஷேஜாடியை விட 80,000 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.

‘பாஜ சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’

‘‘ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மத்தியில் உள்ள பாஜ அரசு தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று சிவசேனா மூத்த தலைவரும் அந்த கட்சியின் மாநிலங்களவை  உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாஜ.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை 5  மாநில தேர்தல் முடிவுகள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன. நாடு முழுவதும் மோடி அலை வீசிக் கொண்டிருப்பதாக பாஜ.வினர் கூறி வந்தது ஒரு மாயை என்பது இப்போது தெளிவாகி விட்டது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: