இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் தான் அதிமுக ஆட்சி நீடிக்கும்

* மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு * கூட்டணிக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் பேசியுள்ளனர். அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில்  யாருடனும் கூட்டணி தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 5 மாநிலத்திலும் பாஜ தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், நாடு  முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக, மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை 5  மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகிேயார் தலைமை தாங்கினர். அனைத்து அமைச்சர்கள்,  தலைமை கழக நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் 45 நிமிடம் நடந்தது.

கூட்டத்தில், “ெஜயலலிதா இல்லாமல் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதியில் வெற்றிபெற்றால்தான் அதிமுக  ஆட்சியை தக்கவைக்க முடியும். அதனால் மாவட்ட செயலாளர்கள், தங்கள் முழு உழைப்பையும் வெளிப்படுத்த வேண்டும். அதனால் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டறிந்து தேர்தல் பணிகளை இப்போது தொடங்க  வேண்டும்” என்று முதல்வர், துணை முதல்வர் பேசியதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலையொட்டி அல்லது முன்னாடியே இடைத்தேர்தல் வரலாம். தேர்தலை சந்திக்க அதிமுக  தயார். அதற்கான ஆலோசனை கூட்டம்தான் இன்று நடந்தது. தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும், களப்பணிகளை விரைந்து செய்யவும் மாவட்ட செயலாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பலவீனமாக இருப்பவர்கள்தான் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்வார்கள். நாங்கள் (அதிமுக) பலமாக இருப்பதால் கூட்டணி தேவையில்லை. தேர்தல் வரும்போது எங்களிடம் கூட்டணிக்கு வருபவர்களை சேர்த்துக்  கொள்வோம். யாரை சேர்ப்பது என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.மக்களின் தீர்ப்பு மாறிக்கொண்டே இருக்கும். அதனால் எதுவாக இருந்தாலும், 5 மாநில தேர்தல் முடிவை வைத்து கணிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று யாருக்கும்  தெரியாது. மக்கள் மனது சுரங்கம் போன்றது, யாரும் புரிந்து கொள்ள முடியாது. டி.டி.வி.தினகரனுடன் எப்போதும் அதிமுக கூட்டணி வைக்காது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் குறித்து விரைவில் தலைமை கழகம்  அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: