உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய வேல்முருகன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை தமிழக  கவர்னர் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எங்கள் கட்சியின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.  இதற்கு அனுமதி கேட்டு கடந்த 1ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். எங்கள்  மனுவை நிராகரித்த கமிஷனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி, கடந்த செப்டம்பர் 26ல் மனுதாரர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. 100  பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறி 1,500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஏற்கனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் மறைந்த தலைவர்களில் ஒருவரான திலீபனுக்கு ஒரு நிமிடம் மவுன  அஞ்சலி செலுத்தினர். போலீசார் விதித்த நிபந்தனைகளை மீறியதால், மனுதாரரின் கட்சிக்கு, உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க போலீஸ் கமிஷனர் மறுத்து விட்டார் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, போலீசார்  கடந்த முறை விதித்த நிபந்தனையை மீறியதால் மனுதாரருக்கு இந்த முறை அனுமதி வழங்க கமிஷனர் மறுத்துள்ளார். எனவே, இதில் தலையிட முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: