பொருளாதாரத்தின் மீது மத்திய அரசு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியிருக்கிறது: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை: நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற நிலையில் தான் பாஜ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.டெல்லி சென்ற, திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும், வருகிற 16ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை சோனியா  உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு வழங்கினார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி:இந்திய நாட்டில் இன்று இருக்கக்கூடிய அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் தலைமையில் கூடிய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் நலன் மீது அக்கறை இல்லாத  ஒரு அரசாக, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

விரிவான பொருளாதார வளர்ச்சி பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஒரு கூட்டு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. எழுத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் மோடி ஆட்சியில்  பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பாஜ ஆட்சியை பொருத்தவரை அது பாஜ ஆட்சியாக மட்டும் அல்லாமல் ஆர்எஸ்எஸ் ஆட்சியாகவும் நடந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக இன்று (நேற்று) மாலையில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த போது ஒரு செய்தி வந்தது. ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர் ராஜினமா செய்திருப்பதாக. மோடி ஆட்சியில் இரண்டு கவர்னர்கள் ராஜினமா செய்திருக்கிறார்கள்.  தமிழகத்தை சார்ந்த ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தது நாட்டுக்கு தெரியும்.அதை தொடர்ந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆகவே இந்த மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கியினுடைய கவர்னர்களே ராஜினாமா செய்ய கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த  ஆட்சியின் நிலையை பற்றி நாடு நன்றாக புரிந்துகொண்டிருக்கிறது.

ஆகவே நாட்டினுடைய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், ஒட்டுமொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பேதங்களை மறந்து, நமக்குள் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு,  மத்தியிலே பாசிச, மதவெறி பிடித்திருக்கூடிய ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து, அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து  நாம் போராட வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் என்னுடைய கருத்துக்களை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்த நேரத்தில் மேகதாது குறித்து பேசினேன்.  அவரும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய மாநிலத்தை சார்ந்திருக்கக்கூடிய முதலமைச்சரிடம் பேசுவதாக என்னிடத்தில் உறுதி கூறியிருக்கிறார். அதைதொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர்  தேவகவுடாவை சந்தித்த போதும், மேகதாது குறித்து பேசியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: