×

புதிய கவர்னரை தேடுவதை விட்டுவிட்டு ரிசர்வ் வங்கி நிர்வாகத்தையும் மத்திய அரசு எடுத்து கொள்ளலாம்: பாஜ மீது சிவசேனா தலைவர் கடும் தாக்கு

மும்பை: மத்திய அமைப்புகளின் அனைத்து நிர்வாகங்களிலும் தலையிட்டு குழப்பி வரும் மத்தியில் உள்ள பாஜ அரசு, ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னரை தேடுவதை விட்டுவிட்டு ரிசர்வ் வங்கி நிர்வாகத்தையும் அதுவே எடுத்துக்  கொள்ளலாம் என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கியுள்ளார்.ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ₹3 லட்சம் கோடி வழங்குமாறு மத்திய அரசு கடந்த சில மாதங்களாகவே வலியுறுத்தி வந்தது. இதற்கு ரிசர்வ் வங்கி நிர்வாகம் மறுத்து வந்ததாகவும், இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர்  உர்ஜித் பட்டேலுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து கடும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.மத்திய அரசின் இந்த நிர்ப்பந்ததுக்கு பணிந்து ₹3 லட்சம் கோடி உபரி நிதியை ரிசர்வ் வங்கி வழங்க உர்ஜித் பட்டேல் சம்மதிக்க வேண்டும் அல்லது அவர் தனது பதவியில் இருந்து விலக நேரிடலாம் என்று தகவல்கள்  வெளியாகி கொண்டிருந்த நிலையில், நேற்று உர்ஜித் பட்டேல் திடீரென ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து விலகினார். தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால்,  மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்னையில் ஆளும் பாஜ அரசை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:சிபிஐ தேர்தல் ஆணையம், நீதித்துறை என பல மத்திய தன்னாட்சி அமைப்புகளில் எல்லாம் பாஜ அரசு மூக்கை நுழைத்து குழப்பி வருகிறது. இந்த நிலையில்தான், மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர்  பொறுப்பில் இருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்திருக்கிறார். மற்ற மத்திய அமைப்புகளை தனது கைப்பாவையாக பாஜ அரசு மாற்றி வைத்திருப்பதைபோல, ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னரை தேடுவதை விட்டுவிட்டு, ரிசர்வ்  வங்கி நிர்வாகத்தை மத்திய அரசே ஏற்று நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் இந்த பிரச்னையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவின் மூலம்  மத்திய அரசின் நிர்வாக சீர்கேடு அம்பலமாகியுள்ளது. இந்த  அரசி கவுன்ட்  டவுண் தொடங்கி விட்டது. விஜய் மல்லையாவை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தனது வெற்றியாக கூறுவது வேடிக்கை. பாஜ.வின்  செல்வாக்கு சரிந்ததற்கு மல்லையாவும் ஒரு காரணம்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,governor ,administration ,Reserve Bank of India ,Shiv Sena , Leave , new governor, Reserve Bank, Administration, Shiv Sena leader
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...