வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜிக்கு இரங்கல் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜி உள்ளிட்டோருக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும்  ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது வரும் ஜன.8ம் தேதி நடைபெற உள்ளது. தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடின. இதனால் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே முதல் நாள் கூட்டம் தொடங்கியது. மக்களவை, அதன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று கூடியது. சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய அமைச்சர் அனந்த் குமார்  ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். இது தவிர மக்களவை எம்பிக்களாக இருந்து சமீபத்தில் மரணமடைந்த போலா சிங், ஷானாவாஸ், முகமது அஸ்ரருல் ஹக் ஆகியோருக்கும்  மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.

 இதேபோல் மாநிலங்களவையிலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்தார். அப்போது 3 முறை பிரதமராக வாஜ்பாய்  பதவி வகித்தபோது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக  செயல்பட்டதை நாயுடு நினைவு கூர்ந்தார். இதுபோல் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய அமைச்சர் அனந்த் குமாருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது தவிர முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள்  ஆர்.கே.தொரேந்திரா சிங், கர்மா டோட்பென், குல்தீப் நய்யார், நந்தமுரி ஹரிகிருஷ்ணா, தர்ஷன் சிங் யாதவ், ரத்னாகர், சத்ய பிரகாஷ் மாளவியா, ராம் தேவ் பண்டாரி, மால்தி சர்மா, என்.டி.திவாரி. மகேஷ்வரி, பாய்னாப் பரிடா  ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து கஜா புயலில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்களையும் மாநிலங்களவை நினைவு கூர்ந்தது. மரணம் அடைந்த தலைவர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில்  இரு  அவைகளிலும்  உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: