புழல் - தாம்பரம் உயர்மட்ட சாலையில் வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் முட்புதர்கள்

அம்பத்தூர்: சென்னை புழலில் இருந்து  அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், நொளம்பூர், மதுரவாயல், போரூர் வழியாக தாம்பரத்திற்கு உயர்மட்ட சாலை செல்கிறது. இச்சாலை அமைந்த பிறகு, சென்னை நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இச்சாலை அமைந்துள்ள கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் சர்வீஸ் சாலை செல்கிறது. இந்த சர்வீஸ் சாலை - உயர்மட்ட சாலைக்கு இடையே 10 அடி உயரம் உள்ளது. இந்த சர்வீஸ் சாலை வழியாக   மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வாகனத்தில் சென்று வருகின்றனர். உயர்மட்ட சாலையின் பக்கவாட்டு சுவரில் ஆலமரம், வேப்ப மரம், முட்செடிகள் உள்ளிட்ட மரங்கள் பல இடங்களில் வளர்ந்துள்ளன. மேலும், சாலைேயாரம் பெரிய அளவில் முட்புதர்கள் உள்ளதால் உயர்மட்ட சாலை பல இடங்களில் காடு போல் காட்சியளிக்கிறது. இந்த முட்புதர்கள் வாகன ஓட்டிகளை புதம் பார்ப்பதுடன், விபத்துக்கு வழிவகுப்பதால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள மரங்களால் சுவரில் விரிசல் ஏற்பட்டு, வலுவிழக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  ‘‘தாம்பரம் - புழல் புறவழிச்சாலையில்  முட்செடிகள் வளர்ந்து சர்வீஸ் சாலைக்கு கீழே தொங்கி கொண்டு வருகிறது. இதில் உள்ள வண்டுகள், பூச்சிகள், குழவிகள் சர்வீஸ் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிப்பதுடன்,  அவர்களின் காது, கண்களில் புகுந்து விடுகின்றன.

இதனால் இரு வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், நாளடைவில், இந்த முட்செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகளின் தலை, உடலை பதம் பார்க்கின்றன. மேலும், வளரும் முட்செடிகள், மரங்களால் உயர்மட்ட பாலத்தில் விரிசலும் ஏற்படுகின்றன. இதனால் நாளடைவில் பாலம் உடைந்து விடும் அபாயமும் உள்ளது. சர்வீஸ் சாலையில் பல இடங்களில்  மழைநீர் கால்வாய்கள் திறந்து கிடக்கிறது. பல இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் சர்வீஸ் சாலை இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால், இரவில் மழைநீர்  கால்வாய் தெரியாமல் இரு  சக்கர வாகன ஓட்டிகள் உள்ளே விழுந்து கை, கால்கள் உடைந்து படுகாயமடைக்கின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை,’’ என்றனர்.

 

வசூலில் மட்டும் அக்கறை

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டாக சர்வீஸ் சாலையில் வளர்ந்துள்ள முட்செடிகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் சாலையோர இரும்பு தடுப்புகளும் விபத்தினால் உடைந்து கிடக்கின்றன. முட்செடிகளை அகற்றவும், இரும்பு தடுப்புகளை சீரமைக்கவும் தனியார் சுங்க சாவடி அமைத்துள்ள நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்கள் வாகன சுங்க  வசூலில் காட்டும் அக்கறையை, சாலை மேம்பாட்டில் காட்டுவது இல்லை. இதனை தேசிய நெடுஞ்சாலை துறையும் கண்காணிப்பது கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: