ராஜஸ்தான், சட்டீஸ்கர், ம.பி.யில் ஆட்சியை இழந்தது பாஜ 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி

* தெலங்கானாவில் மீண்டும் டிஆர்எஸ் கட்சி வெற்றி

* மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பிடித்தது

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மிசோரமில், மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், பாஜ.வை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சியை பிடித்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் பதிவான வாக்குகள் நேற்று அந்தந்த மாநிலங்களில் எண்ணப்பட்டன. 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் நடந்திருப்பதால், இதன் முடிவுகள் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.  அதற்கேற்றார் போல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவியது. இதில், பாஜ சற்றும் எதிர்பாராத வகையில், 5 மாநிலத்திலும் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆரம்பத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசும், பாஜவும் அடுத்தடுத்து முன்னிலை பெறுவதும், பின்னர் பின்தங்குவதுமாக இருந்தன. ராஜஸ்தானில் ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றாலும், பின்னர் மீண்டும் பாஜ முன்னிலை பெற்றது. இறுதியில் பாஜவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்றது. அங்கு 199 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜ 73 தொகுதிகளை கைப்பற்றி தோல்வி அடைந்தது. பகுஜன் சமாஜ் 6 இடங்களையும், மற்ற கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றின.

இதையடுத்து, ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. சட்டீஸ்கரில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வலுவான முன்னிலை பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 67 இடங்களை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது. பெரும்பான்மைக்கு 46 இடங்களே தேவை. பாஜ 15 இடங்களை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 7, மற்றவை 1 இடங்களில் வெற்றி பெற்றன.

இதன் மூலம், இம்மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜ ஆட்சிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜவின் தோல்வியை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ராமன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். 2003ம் ஆண்டு முதல் ராமன் சிங், 15 ஆண்டாக முதல்வராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியப்பிரதேசத்தில் கடும் இழுபறி நிலை தொடர்ந்தது. 230 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. இங்கும் 15 ஆண்டாக ஆட்சி செய்து வரும் பாஜவுக்கு காங்கிரஸ் கடும் போட்டி தந்தது. இரு கட்சிகளும்  மாறி மாறி தொகுதிகளை கைப்பற்றி வந்ததால், இரவு வரை யார் ஆட்சி அமைப்பது என்பது உறுதியாகவில்லை.

இதற்கிடையே, தொங்கு சட்டமன்றம் அமைந்தால், காங்கிரசுக்கு ஆதரவு தர தயார் என பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன.  இதனால், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது. இங்கு, காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜ 109 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. பகுஜன் சமான் 2 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 119 தொகுதிகளில் அக்கட்சி 88 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ், தெலுங்குதேசம், மார்க்சிஸ்ட் கூட்டணி 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட போதிலும், இங்கு பாஜவால் 1 தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.  ராஜஸ்தான், சட்டீஸ்கர், மபியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் மிசோரமில் ஏமாற்றத்தை சந்தித்தது. 40 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. முதல்வர் தன்ஹாவ்லா போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தார். மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி 26 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. மற்ற கட்சிகள் 8 இடங்களில் வென்றன. கடந்த முறை மிசோரமில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத பாஜ, இம்முறை ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றியது.

5 மாநிலத்தில் 3ல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பாஜ கட்சி அலுவலகங்கள் களையிழந்து காணப்பட்டன. 2014 மக்களவை தேர்தலுக்குப் பிறகு நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜ ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதல்முறையாக ஒட்டுமொத்தமாக தோல்வியை சந்தித்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: