×

5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி, டிச.12: மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப் பேரவை பொதுத்தேர்தல் என்பதால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தேர்தலில் பா.ஜ.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.வின் எதிர்காலத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்தும் அடுத்து என்ன செய்வது என்பது குறித்தும் பிரதமர் மோடி கட்சியின் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் மிசோரத்தில் அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணியும் ஆட்சியை பிடித்துள்ளது.

நேற்று காலையில் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. அதேவேளையில், ம.பி.யில் பா.ஜ. - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்தது. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் நாடு முழுவதும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறினார். அப்போது, நிருபர்கள் அவரிடம், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கேட்டனர். ஆனால், கருத்து எதையும் தெரிவிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில், 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அந்தந்த மாநிலங்களில் கட்சியின் தேர்தல் பொறுப்புகளை வகித்த தலைவர்கள் கலந்து கொண்டதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அந்தந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகளின் செயல்பாட்டை கணித்து மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இடைத்தேர்தல்களில் பா.ஜ. சாதித்தது என்ன?
* 2014 மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்த 27 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வென்ற ஒரு தொகுதியைக்கூட பா.ஜ. கைப்பற்றவில்லை. அதேவேளையில், தான் வென்ற 8 தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்துள்ளது.
* 2014 தேர்தலில் வெற்றி பெற்ற 8 தொகுதிகளை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ. இழந்துள்ளது.
* கடந்த நான்கரை ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் வென்றிருந்த 27 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பா.ஜ. வெற்றி பெறவில்லை.
* 2014 தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் வென்றிருந்த 13 தொகுதிகளில் 5ல் மட்டுமே பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state election ,Modi , 5 state election results, Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...