கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய நீர்வளத்துறை தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்புதலையும் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில்  நாளை விசாரணைக்கு வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5ஆயிரத்து 912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான  வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மேகதாது பகுதியில்  அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு எதிரான மனுவை தமிழக அரசு தரப்பில் கடந்த 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காவிரியின் குறுக்கே புதிய அணையை கட்ட தமிழகம்,  கர்நாடகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தனிப்பட்ட  அதிகாரங்கள் இல்லை என கடந்த 2007ம் ஆண்டே நடுவர் மன்றம் தெளிவாக  தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை தரப்பில் மேகதாதுவில் அணைக்கட்ட  கர்நாடக மாநிலத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும். எனவே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய நீர்வளத்துறையின் ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே.கவுல், கேஎம்.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் ஒரு கோரிக்கையை வைத்தார். அதில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய  நீர்வளத்துறை வழங்கியுள்ள ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கடந்த 30-ம் தேதி நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரணை  நடத்த வேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் குறிப்பிட்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில்,”மேகாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதில் வரும் வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் வழக்கு பட்டியலிடப்பட்டு அவசர வழக்காக  நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து கர்நாடகாவுக்கு எதிரான தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இது நீதிபதி கான்வில்கர்  அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக புதுவை அரசு தொடர்ந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.  

மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கினாலும் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்றும், மேலும் இதில் தமிழகத்தின் முழு ஒப்புதல் இருந்தால் மட்டுமே அணை கட்ட  முடியும் என காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த காவிரி ஆணையத்தின் 2வது கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: