×

செல்லம்பட்டி ஒன்றியத்தில் தரமற்ற கட்டுமானத்தால் ஆட்டங்காணும் அங்கன்வாடி மையங்கள்

உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்திலுள்ள அங்கன்வாடி மைய கட்டிங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியம் புள்ளநேரி ஊராட்சிக்கு உட்பட்டது கீழப்பச்சேரி. இங்கு கடந்த 2016-17ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தின் தரைதளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் இங்குள்ள கழிவறை, சமையலறையின் தரைதளமும் சேதமடைந்து  கிடக்கிறது. அங்கன்வாடி மையத்தின் தரைதளம் ஒரு அடி கீழே இறங்கி பள்ளமாகியுள்ளதால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கீழப்பசேரியை சேர்ந்த பொன்னுத்தாயி கூறுகையில், ‘அங்கன்வாடி மைய கட்டுமானத்திற்கு காட்டுப்பகுதியிலுள்ள மண் மற்றும் ஓடையிலுள்ள மண் பயன்படுத்தப்பட்டது. தரமான மணல் வைத்து கட்டாததால் தரைதளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது’ என்றார். ஜெயராணி கூறுகையில், ‘எங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து விட பயமாக இருக்கிறது. கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ தெரியவில்லை. இது சம்மந்தமாக பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை’என்றார். பஞ்சம்மாள் கூறுகையில், ‘குழந்தைகளின் உயிர் மதிப்பு தெரியாமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தரமற்ற கட்டுமான பணி மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

 முண்டுவேலம்பட்டி: இதே ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் உள்ளது முண்டுவேலம்பட்டி. இங்கு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்திற்கு பாதை வசதி இல்லை. மையத்தை சுற்றிலும் கழிவுநீரை தேங்கியுள்ளது. இந்த கழிவுநீரை வழியாகவே குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று வருகின்றன. அங்கன்வாடி மைய கட்டிடமும் சேதமடைந்துள்ளது. அங்கன்வாடி மையம் அருகிலுள்ள திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து முண்டுவேலம்பட்டி மணிகண்டன் கூறுகையில், ‘அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மையத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இடிந்து கிடக்கும் கழிப்பறை, சமையலறை, தரைதளத்தை சரிசெய்ய வேண்டும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anganwadi Centers ,Union , Petty union, buggy construction, anganwadi centers
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...