ஆரோக்கியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றும் சேலம் வாலிபர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

நெல்லை: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றும் சேலம் வாலிபர் நேற்று நெல்லை வந்தார். தினமும் 10 கி.மீ சைக்கிளில் செல்லுமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

சேலம் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் ராசே ராஜன். ‘‘உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம்’’ என்பதை வலியுறுத்தி இவர், கடந்த 2017 அக்.2ம் தேதி நாடு முழுவதும் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். எரிபொருள் சேமிப்பு, இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சைக்கிள் பயணத்தின்போது வலியுறுத்தி வருகிறார். ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களை சுற்றிவிட்டு தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள இவர், நேற்று நெல்லை வந்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ‘‘உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம்’’ என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இந்தியா முழுவதும் 2 ஆண்டுகள் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறேன். அன்றாடம் நாம் கடைகள், மார்க்கெட், பள்ளி, அலுவலகம், ஆலயம், மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு சுமார் 10 கி.மீ தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். சைக்கிள் பயணம் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதோடு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க உதவும். எரிெபாருள் சேமிப்புக்கு அதுவே நல்லது’’ என்றார். தொடர்ந்து அவர் மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சைக்கிளில் செல்ல உள்ளார். வருகிற 2019 செப்.30ம் தேதி அவர் பயணத்தை நிறைவு செய்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: