×

கே.ஆர்.பி அணையில் வெளியேறும் உபரி நீரை பாம்பாறு அணைக்கு திருப்பிவிட விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு திருப்பி விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்தங்கரை அருகே 42 அடி கொள்ளளவு கொண்ட பாம்பாறு அணை உள்ளது. மாரம்பட்டி, கானம்பட்டி, பாவக்கல், கொட்டுக்காரம்பட்டி, வண்டிக்காரன்கொட்டாய், புதூர் என நூற்றுக்கணக்கான கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாய நிலங்கள் பாம்பாறு அணை நீரை நம்பியுள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்த பாம்பாறு அணையானது இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டு காணப்படுகிறது. மேலும் அணை வறண்டதால் இங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் கூட நீரின்றி கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றங்கரை கால்வாய்களில் சென்று சாத்தனூர் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. எனவே கே.ஆர்.பி. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பாரூர் பெரிய ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு கொண்டு வந்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், பாசனம் நடத்த வசதியாக இருக்கும் என்றும் வவிசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பேசிய விவசாயிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பாறு அணைக்கு தண்ணீர் விடுவதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். பருவமழை காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் பாம்பாறு அணை நீர்வரத்துக்கு மாவட்ட ஆட்சியர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,KRP , KRB dam,surplus water,Pamparu Dam,irrigation, farmers
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...