வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தாத அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் தர்ணா

தண்டையார்பேட்டை: வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தாத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். வரும் 5-1-2019ம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணி சம்பந்தமாக வாக்குச்சாவடி அலுவலகர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த கருத்து கேட்பு கூட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்து வருகிறது.

அதன்படி, ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது.

தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி தெருவில் உள்ள 42வது வார்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு திமுக முகவர்கள் சென்றபோது, அங்கு கூட்டம் நடப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. இதுபற்றி மாநகராட்சி இளநிலை பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, எங்களுக்கு அதுபோல் எந்த தகவலும் வரவில்லை என கூறினார். இதனால் திமுக முகவர்கள் வழக்கறிஞர் மருதுகணேஷ், வட்ட பொறுப்பாளர்கள் த.தமிழ்செல்வன், த.குமார் ஆகியோர், அதிகாரிகளை கண்டித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம், வாக்குச்சாவடி அலுவலர்களை வரவழைக்கிறோம். அதுவரை காத்திருக்கும்படி கூறினர். இதையடுத்து சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின், 27 அலுவலர்களுக்கு பதில், 5 பேர் மட்டுமே வந்தனர். அவர்களை வைத்து கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு திமுகவினர், வாக்குச்சாவடி அலுவலர்களே இல்லாதபோது, நாங்கள் எப்படி குறைகளை கூறமுடியும். எனவே, நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என கூறி வெளியேறினர்.

அதன்பின்னர், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி சுரேஷிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், எவ்வித ஏற்பாடுகளும் செய்யாமல் நடக்கும் கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். மீண்டும் வாக்குச்சாவடி அலுவலர், பாக முகவர்கள் கூட்டத்தை கூட்டி, எங்களது கருத்துக்களை கேட்டு, அதன் அடிப்படையில் போலி வாக்காளர்களை நீக்கி, தகுதியான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: