×

ரூ.9,000 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கு மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு: கடன் பற்றி நீதிபதி விமர்சனம்

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை, சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில், விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62), தனது தொழிலை பெருக்குவதற்காக பொதுத்துறை வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றார். ஆனால் அவர் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தவில்லை. வட்டியுடன் சேர்த்து அவர் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்றார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துக்களை முடக்கின. விஜய் மல்லையா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதால், அவரை சிபிஐயால் கைது செய்து இந்தியா அழைத்து வர முடியவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்ப கோரி லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையா மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி தொடங்கி ஓராண்டாக இழுத்தடித்தது. இந்திய சிறையில் வசதிகள் இருக்காது, நல்ல மருத்துவ வசதிகள் கிடைக்காது, உயிருக்கு ஆபத்து நேரிடும் என விஜய் மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அடைக்கவுள்ள மும்பை ஆர்த்தர் ரோடு சிறையின் 12வது அறை வீடியோ எடுக்கப்பட்டு லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது தலைமை நீதிபதி எம்மா அர்பத்நாட்  கூறியதாவது:
விஜய் மல்லையாவுக்கு எதிராக பொய் வழக்கு போட்டுள்ளதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த பின், இதற்கு பதில் அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இவருக்கு எப்படி இவ்வளவு அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன; அவை எப்படி செலவிடப்பட்டன என்பது ஆச்சர்யமாக உள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்குகளை சந்திக்க 62 வயதான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும்.

 விஜய் மல்லையா சிறை வைக்கப்படவுள்ள மும்பை ஆர்த்தர் ரோடு சிறையின் 12வது அறை வீடியோ தெளிவான படத்தை காட்டுகிறது. இது சமீபத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவர் அங்கிருந்தே தனது நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு சிகிச்சை பெற முடியும். இங்கு அவருக்கு ஆபத்து ஏற்படும் என நம்புவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இவ்வாறு நீதிபதி எம்மா தனது தீர்ப்பில் கூறினார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் பரிந்துரையை நீதிபதி எம்மா இங்கிலாந்து அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு பரிந்துரைத்தார். இவர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவை பிறப்பிப்பார். லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு உரிமை உள்ளது. இதனால் அவர் மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

சிபிஐ வரவேற்பு
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி லண்டன் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சிபிஐ வரவேற்றுள்ளது. இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், ‘‘இந்த முடிவை சிபிஐ வரவேற்கிறது. விஜய் மல்லையாவை விரைவில் இந்தியா கொண்டு வந்து இந்த வழக்கை முடிப்போம். சிபிஐக்கு தனி பலம் உள்ளது. இந்த வழக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். சட்டம் மற்றும் உண்மை விஷயங்கள் நாங்கள் வலுவாக இருந்தோம். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்’’ என்றார்.

‘திருடினேன் என கூறப்படுவதை பொய்யாக்க விரும்புகிறேன்’
லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே விஜய் மல்லையா அளித்த பேட்டியில், ‘‘நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை. கடனை திருப்பிச் செலுத்தும் வழிமுறை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும், நான் இந்தியாவுக்கு அனுப்பப்படும் வழக்குக்கும் தொடர்பில்ைல. கடனை திருப்பிச் செலுத்த பொய்யான வழிமுறைகளை கூறி யாரும் நீதிமன்ற சட்டத்தை அவமதிக்க முடியாது. எனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவை பொய்யான சொத்துக்களாக இருக்க முடியாது. நான் பணத்தை திருடிவிட்டு ஓடிவிட்டேன் என கூறப்படுவதை பொய்யாக்க விரும்புகிறேன்’’ என்றார்.

தயாராக இருக்கும் மும்பை சிறை
இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை அடைத்து வைப்பதற்காக அதிக பாதுகாப்பு கொண்ட அறை ஒன்றை மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப் இதே சிறையில்தான் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். ஆர்த்தர் ரோடு சிறை வளாகத்தில் இருக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள அதிக பாதுகாப்பு கொண்ட அறையில் மல்லையாவை அடைத்து வைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “மல்லையாவை பாதுகாப்புடன் அடைத்து வைக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். அவர் இந்த சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டால் அவருடைய பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம். மல்லையாவுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அறைக்கு அருகிலேயே இருக்கும் மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பார்கள்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : London Court ,India ,Mallya , Rs 9,000 crore, bank fraud case, London court, Mallya, India,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...