×

செல்போனை கண்டு நாம பயப்படணுமா?

செல்போன் கையடக்கத்தில் ஒரு சவப்பெட்டி. இந்த வரியைக் கொஞ்சம் மடக்கி மடக்கி எழுதினால் அது ஓர் இதழில் பிரசுரிக்கத் தகுதியான புதுக்கவிதையாகிவிடும். பிறகு, அதை யாரேனும் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் மேடைகள்தோறும் முழங்குவார். உண்மையில், இந்தக் கருத்து உண்மையா பொய்யா என்பதுவேகூட ஒரு பட்டிமன்றம் நடத்தும் அளவுக்குத் தகுதியான தலைப்புதான். செல்போன்கள் வந்தது முதலே அதைப்பற்றிதான் எத்தனை எத்தனை தொன்மங்கள் நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

செல்போனை சட்டைப்பையில் வைத்தால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சால் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் என்கிறார் ஒருவர்; பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்கிறார் இன்னொருவர். அப்பதான் எங்கதான் அந்த போனை வைக்க என்று குழப்பமாகிவிடுகிறது? அதனால்தானோ என்னவோ காரில் செல்பவர்கள் டாஷ்போர்டில் வைப்பதும் கையில் தூக்கிக்கொண்டும் திரிவதுமாய் எச்சரிகையோடே இருக்கிறார்கள். செல்போனை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்கினால் இரவு தூக்கம் கெட்டுப்போகும்.

ஆழமான தூக்கம் கிடைக்காது என்று இரவில் தொலைவில் வைத்துவிடுகிறார்கள் சிலர். வலது காதில் வைத்துப் பேசினால் மூளைக்கு ஆபத்து என்று இடது காதிலேயே வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். செல்போனை இரவில் பார்த்தால் கண்கள் கெட்டுப்போகும் என்கிறார்கள் சிலர். செல்போன் டவர்களால்தான் சிட்டுக்குருவிகள் செத்துபோயின என்று பல வருடங்களாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி செல்போன்கள் பற்றிதான் எத்தனை எத்தனை பேச்சுக்கள்.

இதில் எது உண்மை? எது பொய்? தொன்னூறுகளின் தொடக்கத்தில் செல்போன் அறிமுகமானபோது சமூகத்தில் அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கம் போல தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்த இன்னொரு தொழில்நுட்பம் என்பதைப் போன்ற மனோபாவம்தான் பொருளாதார நிபுணர்களுக்கும் சமூக சிந்தனையாளர்களுக்குமேகூட இருந்தது. அப்போது செல்போன் என்றால் இன்று இருக்கும் கையடக்க மாடல்கள் எல்லாம் இல்லை.

கிட்டதட்ட செங்கல் சைஸில் இருக்கும். அப்போது இன்கம்மிங் அழைப்புகளுக்கும் கட்டணம், அவுட் கோயிங் அழைப்புகளுக்கும் கட்டணம் என்பதால் செல்போன் என்பது மிக மிக காஸ்ட்லியான சமாசாரம். வசதி படைத்தவர்கள், தொழில் காந்தங்கள் மட்டுமே செல்போனை வைத்துக்கொள்ள முடியும் என்ற சூழல்தான் இருந்தது. டெக் நிறுவனங்களின் அதிரடியான வளர்ச்சியால் திடீரென செல்போன் நிறுவனங்கள் சந்தையை ஜனநாயகப்படுத்த செல்போன் விலை அதள பாதாளத்துக்கு இறங்கிவந்தது. அப்போது முதல் அது சாமானிய மனிதர்களுக்கும் எட்டும் கனியாக ஆதாமின் ஆப்பிளாக அனைவர் கையிலும் கிடைக்கத் தொடங்கியது.

சரியாக, இந்த இடத்தில்தான் செல்போன் தொடர்பான அத்தனை உரையாடல்களும் வடிவெடுத்தன. செல்போன்கள் ஜனநாயகமானபோது மனித குல வரலாற்றில் மாபெரும் புரட்சியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றார் மோட்டரோலா நிறுவனத்தின் அதிபர். எப்படி எனக் கேட்டபோது இப்போது ஒரு பெண்ணால் எந்த ஓர் ஆணையும் எளிதாகத் தொடர்புகொள்ள முடியுமே என்று குறும்பாய் கண் சிமிட்டினார். உண்மையில் செல்போன்கள் உருவாக்கிய மாற்றங்கள் அசாதாரணமானதுதான். மோட்டரோலா அதிபர் சொன்ன அந்த பதிலை விடுங்கள்.

அதைக் கடந்து பல விஷயங்களிலும் செல்போன் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். அது போல செல்போன் இல்லாத ஜோப்புக்கு சிறப்பு பாழ் என்றானது. கிட்டதட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு செல்போன் என்று சொல்லும் நிலைமாறி ஒவ்வொருவரிடமும் இரண்டு போன்கள் என்ற நிலை உருவானது. இன்று அதுதான் டூயல் சிம் என்று பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. இன்று செல்போன் ஒரு வளர்ந்த தனிமனிதனின் அடையாளம்.

செல்போன் இல்லாத மனிதனை முழு மனிதனாகவே பார்ப்பதில்லை யாரும். ஒருவர் கையில் உள்ள செல்போனை வைத்துத்தான் அவர் அந்தஸ்தை, தகுதியை மதிப்பிடவே செய்கிறோம். நாம் ஒவ்வொருவரும் இன்று நம்மிடம் உள்ள செல்போனின் அடிமைகள் என்று சொன்னால் சிலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், இன்று அதுதான் எதார்த்தம். ஒரு மனிதன் சராசரியாக ஒருநாளில் ஐம்பது முதல் முந்நூறு முறை வரை தன் ஜோப்பில் கையில் இருக்கும் செல்போனை ஆன் செய்து பார்த்துக்கொள்கிறான் என்கிறது ஓர் ஆய்வு.

செல்போனில் செய்தியோ, அழைப்போ வருகிறதோ இல்லையோ குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை அதை எடுத்துப் பார்க்கும் வழக்கம் இன்று எல்லோருக்குமே இயல்பாக வந்துவிட்டது. ஒரு தனிமனிதன் தன் வாழ்நாளில் எதையும்விட தன் செல்போனை மிகவும் நேசிக்கிறான். பெரும்பாலானவர்கள் தங்கள் செல்போனை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை. அது அவர்கள் கணவனோ மனைவியோ ஆனாலும்கூட என்று சொல்கிறது இன்னோர் ஆய்வு. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

சமீபத்தில் நிகழ்ந்த வழக்கு ஒன்றில் ஐரோப்பாவில் கணவனின் அனுமதியின்றி அவரது செல்போனைப் பார்க்க மனைவிக்கு உரிமையில்லை என்று அதிரடி தீர்ப்பு சொல்லியிருக்கிறது நீதி மன்றம். ஒரு தனிமனிதனின் அந்தரங்கம் புனிதமானது. அதுபோலவே அவரின் அந்தரங்கத்தோடு தொடர்புடைய செல்போனையும் பார்க்க வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் வலுப்பெற்று வருகிறது. செல்போன் என்பது தனி மனிதர் உடமை என்பதிலிருந்து ஒருவரின் புனிதமான அந்தரங்கம். அது மற்றவர்கள் தொடக்கூடாத, பார்க்கக் கூடாத பவித்திரமான வஸ்து என்ற விநோத அந்தஸ்தைக் கோரி நிற்கும் அளவுக்கு மனித வாழ்க்கையில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

மனிதன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பொருளை நேசிக்கிறான் என்றால் அது செல்போனை மட்டுமே என்றார் சமூகவியல் அறிஞர் போத்திரியா. வரலாற்று காலத்தில் மனிதக் குரங்கு மனிதனான காலகட்டத்தில் கற்களையும் எலும்புகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். அப்போது மனிதன் எங்கு சென்றாலும் கையில் அந்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு திரிந்தான். அந்த ஆயுதம்தான் அவனுக்கு அசாதாரணமான பலத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து பரிணாம ஏணியில் வேகமாக முன்னேற உதவியது.

அந்த கற்கால ஆயுதங்களுக்குப் பிறகு மனிதன் எப்போதும் தன்னுடன் காவிக்கொண்டு திரிவதும், பெருங்காதலுடன் நேசிப்பதுமாக செல்போனே இருக்கிறது. இன்று செல்போன்கள் இருக்கும் துணிவில்தான் பெண்கள் வீட்டைவிட்டு தைரியமாக வெளியே வந்து வெளியூர்களில் தங்கிப் படிக்கிறார்கள், வேலைக்குச் சென்று வருகிறார்கள். செல்போன் இருக்கும் தைரியத்தில்தான் ஒரு மனிதன் தன் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து மாதக் கணக்கில் பிரிந்து வேலைப் பார்த்துவருகிறான்.

சாதாரண கட்டுரை எழுதுவதில் தொடங்கி ஒரு பெரிய அறுவைசிகிச்சை செய்வது வரை பலருக்கும் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருப்பது செல்போன்கள்தான். முதலில் செல்போன்கள் பேசுவதற்கும் எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் அனுப்பவும் மட்டுமே பயன்பட்டன. செல்போன் நிறுவனங்களின் போட்டியும் நம்முடைய வரன்முறையற்ற நுகர்வுக் கலாசார வெறியும் செல்போனில் புதிய புதிய வசதிகளைப் பெருக்கிக்கொண்டே இருந்தன. முதலில் செல்போனில் கேமரா வந்தது. பிறகு வீடியோக்கள் பார்க்கும் வசதி வந்தது, பிறகு வீடியோக்களை எடுக்கும் வசதி அனுப்பும் வசதி வந்தன.

இன்டர்நெட்டுடன் செல்போனை இணைத்து ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் வந்தவுடன் இது மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருந்தது. செல்போனில் மிக்ஸி, கிரைண்டர் தவிர எல்லா வசதிகளும் வந்துவிட்டன என்று சினிமாவில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். அந்த அளவுக்கு இதில் ஒவ்வொரு வசதியாய் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. செல்போன்கள் வசதி அதிகரிக்க அதிகரிக்க அதன் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். செல்போனால் தீமைகள் இல்லாமல் இல்லை.

செல்போன் குறித்து நடமாடிக்கொண்டிருக்கும் பல தகவல்கள் நம் வில்லேஜ் விஞ்ஞானிகளால் அடித்துவிடப்பட்டவையே. அதில் பெரும்பாலானவற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், நம்முடைய கண்மூடித்தனமான டெக்னாலஜி மோகம் அந்தத் தொழில்நுட்பத்தையே மனிதகுலத்துக்கு எதிரானதாக மாற்றிக்கொண்டிருக்கிறதோ என்று சந்தேகம் எழாமல் இல்லை. சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் ஓர் இளைஞரின் செல்போனைத் தட்டிவிட்ட சம்பவம் தமிழகம் முழுதும் வைரலானது. திறப்பு விழா நிகழ்வுக்கு வந்த அவரை செல்ஃபி எடுக்க முயன்றார் அந்த இளைஞர்.

சிவக்குமார் செய்தது சரி என்றும் தவறு என்றும் பலவிதமான வாதப் பிரதிவாதங்கள். மறுநாள் சிவக்குமாரே நேரடியாகத் தோன்றி தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ள பிரச்சனை ஓரளவு ஓய்ந்தது. உண்மையில் சிவக்குமார் செய்ததில் அவரளவில் தவறே இல்லை. அந்த இளைஞர் நடந்துகொண்டதிலும் தவறு இல்லைதான். இது ஒரு தலைமுறை இடைவெளி. தரமான கேமரா மேன்களிடம் மட்டுமே புகைப்படக் கருவி இருந்த காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர் சிவக்குமார் அவர்கள். அவரைப் போன்றவர்களுக்கு புகைப்படம் என்பது காமா சோமாவென்று எடுக்கப்படுவது அல்ல.

அதற்கான தருணம், மனநிலை, அதற்கான தயாரிப்பு எல்லாம் மிகவும் முக்கியம். மேலும், அது ஒருவரின் அந்தரங்கம். யார் ஒருவரைப் புகைப்படம் எடுக்கும் முன்பும் எடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்பது ஒருவகை நாகரிகம். இந்தக் காலத்தில் பலருக்கும் குறிப்பாக, இளசுகளுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவதே இல்லை. அவர்களுக்குப் புகைப்படங்கள், அதில் வெளிப்படும் மானுட உணர்வுகள் போன்றவை குறித்து எல்லாம் உணர்வுப்பூர்வமான மனநிலைகள் ஏதும் இல்லை.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான செல்ஃபிகளை, படங்களை எடுத்துக் குவிக்கிறார்கள் என்பதால் ஒரு தனி புகைப்படம் அவர்களுக்கு எந்த சலனத்தையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை. ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இளமைகாலப் புகைப்படம் ஒன்றுகூட இல்லை என்றும், அதை எடுக்கும் அளவுக்கு அப்போது வசதியோ, வாய்ப்போ இல்லை என்றும் ஆதங்கப்பட்டிருந்தார். இதுதான் அந்தக் காலத் தலைமுறையினரின் எதார்த்தம். ஆனால், இந்தக் கால தலைமுறையினருக்கோ நூற்றுக்கணக்கான படங்கள் இருக்கின்றன.

தினசரி படங்களாக எடுத்துக் குவிக்கிறார்கள் என்ற சூழலில் அவர்களுக்குப் புகைப்படம் எடுப்பது குறித்த லஜ்ஜை என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது. செல்போன் டவர்கள் நம் காலத்தின் மிகப் பெரிய சவால்கள் என்பதையும் இந்த இடத்தில் சொல்ல வேண்டும். செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து என்பதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை இன்னமும் யாராலும் ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், சிட்டுக்குருவிகள் இனம் தொன்னூறுகளில் இருந்து மெல்ல அழிந்துவருவது என்னவோ நிஜம்.

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இது நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், இந்த செல்போன் டவர்கள் அமைப்பதில் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக, எப்படியான இடத்தில் செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து போதுமான கைடுலைன்கள் இருக்கின்றனதான். ஆனால், இவை முறையாகச் செயல்படுத்தப் படுகின்றனவா என்பதுதான் தெரியவில்லை. சமீபத்தில் கஜா புயல் வந்த போது கோடிக்கணக்கான மரங்கள் தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

அதுபோலவே, செல்போன் டவர்களும் சரிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்கிறார்கள். ஒரு ஏரியாவுக்கு இத்தனை செல்போன் டவர்கள்தான் வைக்க வேண்டும். ஒரு டவருக்கும் இன்னொரு டவருக்கும் இத்தனை இடைவெளி இருக்க வேண்டும் என்பதைப் போன்ற விதிகள் எல்லாம் இருக்கின்றனதான். ஆனால், பல இடங்களில் இதில் குளறுபடிகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. முன் ஒருகாலத்தில் அரசின் பி.எஸ்.என்.எல் உடன் டவர் ஒப்பந்தம் செய்துகொண்டு தொழில் செய்து வந்த முன்னணி செல்போன் நிறுவனம் ஒன்று இன்று தாங்களாகவே பல இடங்களிலும் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் டவர்களை நிறுவியுள்ளது.

இப்போது நன்கு வளர்ந்த அந்த நிறுவனம் இதர தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய டவரை வாடகைக்கு விடும் அளவு நன்கு முன்னேறியுள்ளது. ஒரு செல்போன் டவர் நிறுவ வேண்டும் என்றால் அந்தக் கட்டடம் அதற்கு ஏற்ற வலுவுடன் இருக்க வேண்டியது அவசியம். பல இடங்களில் இந்த விதி முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை. வீடுகள், கட்டடங்கள் கட்டும் யாரும் செல்போன் டவர் இதன் மீது வரும் என்ற கணக்கோடு எல்லாம் கட்டுவது இல்லை என்பதால் சாதாரணமான அஸ்திவாரம் ஒன்றை எழுப்பியே கட்டுகிறார்கள்.

பிற்காலத்தில் செல்போன்களின் பெருக்கத்தால் புதிய டவர் அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது, நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு உள்ள ஒரு சாதாரணக் கட்டடத்தில்கூட டவரை நிறுவிவிடுகிறார்கள். வாடகை வருகிறதே என்ற பேராசையில் வீடு அல்லது கட்டடத்தின் உரிமையாளரும் அதற்கு அனுமதி கொடுத்துவிடுகிறார். விளைவு, இப்படியான புயல் அடிக்கும்போது டவர்கள் அடியோடு சரிந்து முதலுக்கே மோசமாக மாறிவிடுகின்றன. செல்போன் மட்டும் இல்லை எந்த டெக்னாலஜியுமே ஆபத்தானது இல்லை.

ஆபத்து மனித மனதில் உள்ள பேராசையில்தான் இருக்கிறது. நாம்தான் நம்முடைய அளவுக்கு அதிகமான நுகர்வு வெறி, பேராசை போன்றவற்றால் இயற்கை விதிகளை மீறி நடந்து தொழில் நுட்பங்களைத் தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துகிறோம். எங்கெங்கோ இருக்கும் இருவர் அங்கு இருந்தபடியே விருப்பப்பட்டவருடன் உரையாடி மகிழும் அற்புதமான வசதியை உருவாக்கிக்கொடுத்தது தொழில்நுட்பம்.

கண்ட கண்ட இடத்தில் எல்லாம் டவரை நிறுவி சேதத்தை உருவாக்கிக்கொள்கிறது நம் பேராசை. வாழ்வில் முக்கியமான இடங்களில் முக்கியமான தருணத்தைப் பதிவு செய்ய செல்போனில் கேமராவை உருவாக்கிக்கொடுத்தது தொழில்நுட்பம். பாம்புடன் செல்ஃபி எடுத்து மரணத்தைத் தேடிக்கொள்கிறது நம் முட்டாள்தனம். எனவே, வெறுமனே தொழில்நுட்பத்தை குற்றம் சொல்வதில் பலன் இல்லை. மாற வேண்டியது நம் மனநிலைதான்.

- என்.யுவதி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cell phone,fear,radiation
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...