ராசிபுரம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் திராட்சை சாகுபடி

* ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆர்வம்

Advertising
Advertising

ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைத்து விதையில்லா திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  அருகேயுள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்  பன்னீர்செல்வம். இவரது மனைவி மாதேஸ்வரி.  விவசாய தம்பதிகளான இவர்கள்,  தங்களது மூன்றரை ஏக்கர் நிலத்தில், கடந்த 30 ஆண்டுகளாக  தோட்டக்கலைத்துறை உதவியுடன், பன்னீர் திராட்சை சாகுபடி செய்துவந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாணிக்சந்த் என்ற  புதிய வகையான விதையில்லா திராட்சையை, சொட்டுநீர் பாசன முறையில்  சாகுபடி  செய்துள்ளனர். இந்த திராட்சையை பயிரிட முதற்கட்டமாக தோட்டத்தில் சுமார் 8 அடி உயரத்தில் பந்தல்  அமைத்துள்ளார். திராட்சை பழங்களை சேதப்படுத்தும் பறவைகளை  கட்டுப்படுத்த பந்தல் மீது வலை பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், சொட்டுநீர் பாசனத்தை  பயன்படுத்தி, குறைந்த அளவு தண்ணீரில் செடிகளை பராமரித்து வருகிறார்.

alignment=

இந்நிலத்தில்  திராட்சை செடிகள் நன்கு வளர்ந்து மேலுள்ள பந்தலில் படர்ந்து கொத்து  கொத்தாக பன்னீர் திராட்சை மற்றும் விதையில்லா திராட்சை பழம் பிடித்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் மலைகள்  நிறைந்துள்ளதால், பட்டணம் பகுதியில் மிதமான பருவநிலை காணப்படுகிறது. இதனால் செடிகள் செழித்து வளர்ந்துள்ளது. இம்மாத  இறுதியில் திராட்சை அறுவடை தொடங்குகிறது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை  இந்த செடியின் மூலம் திராட்சை உற்பத்தி செய்ய முடியும் என பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும்  திராட்சையை நாமக்கல், சேலம், ஈரோடு, ஆத்தூரை சேர்ந்த வியாபாரிகள்  நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். தவிர, ராசிபுரம் உழவர் சந்தைக்கு  கொண்டுசென்றும் விற்பனை செய்து வருகின்றனர். நல்ல விலை கிடைப்பதால்,  இப்பகுதி விவசாயிகள் பன்னீர்செல்வம் மேற்ெகாண்டுள்ள திராட்சை சாகுபடி போல்,  தாங்களும் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

நாமக்கல், சேலம், தர்மபுரி,  கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கும் பந்தல் அமைத்து, சொட்டுநீர் பாசனம்  மூலம் விதையில்லா திராட்சை சாகுபடி செய்ய, தோட்டக்கலைத்துறை மூலம் அரசின்  மானியத்தை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: