அறை கட்டணம், உணவு பொருள் விலை உயர்வு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைகிறது

* போலீஸ் கெடுபியும் அதிகரிப்பு

Advertising
Advertising

ஊட்டி :  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், அணைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இதனை காண, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

  கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, அண்டைமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது  பெருமளவில் குறையத்துவங்கியுள்ளது. இதற்கு காரணம் நீலகிரி மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது லாட்ஜ், காட்டேஜ் போன்றவைகளின் அறை கட்டணங்களை அதிகளவில் உயர்த்துவதே.

 சாதாரண நாட்களில் ரூ.1000 என்பது அறை கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையாளர்கள் சீசன்களின் போது அறைகளின் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். இது மட்டுமின்றி வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சிலர் கட்டணங்களை உயர்த்துகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலையையும்  இரு மடங்காக உயர்த்தி விடுகின்றனர். மேலும், நீலகிரி தயாரிப்புக்களான யூகாலிப்டஸ் தைலம், வர்க்கி, ேஹாம்மேட் சாக்லெட் என அனைத்து பொருட்களுக்கும் விலையை உயர்த்தி விடுகின்றனர். அறை கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகளால் இங்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது.

 இதனை மீறி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் தங்குவதை தவிர்க்கின்றனர். குறிப்பாக, நடுத்தர மக்கள் ஊட்டியில் தங்குவதற்கு விருப்பப்படுவதில்லை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாடகை காரை எடுத்துக் கொண்ேடா அல்லது தங்களது சொந்த கார்களிலோ ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்த வேகத்தில் ஒரு சில சுற்றுலா தலங்களை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். இதனையும் தாண்டி தற்போது நீலகிரி காவல்துறையினரின் கெடுபிடியால், கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர்.

alignment=

 குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் அதிகளவு வந்துக் கொண்டிருந்த இளைஞர்கள்  ஊட்டி வருவதை அடியோடு நிறுத்திவிட்டனர். கேரள மாநில வாகனங்கள் என்றாலே, கொஞ்சம் கூட இறக்கம் காட்டாமல் போலீசார் நடந்துக் கொள்வது தான் காரணம். மாநில எல்லைகளிலேயே செக்கிங் என்ற பெயரில் கேரள மாநில சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டுவதால் ஊட்டி வந்து திரும்புவதற்குள் அவர்களின் பாக்கெட்டில் உள்ள மொத்த பணத்தையும் வசூலித்த பின்னரே வழியனுப்பி வைக்கின்றனர்.

 எந்த சாலைகளில் சென்றாலும், எந்த சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், அவர்களை வளைத்து வளைத்து அபராதம் விதிப்பதும், அபராதத்துடன் கூடிய வசூல் வேட்டையும் நடத்துவதே காரணம். இதனால், தற்போது பெரும்பாலான வாலிபர்கள் ஊட்டிக்கு வருவதை தவிர்த்துவிட்டனர். இதற்கு மாறாக, அண்டை மாநிலமான மைசூர் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

 இது போன்ற காரணங்களால் தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.அறை, உணவு கட்டணஉயர்வு மற்றும் போலீசாரின் சோதனை ஆகியவை தொடர்ந்தால்,ஓரிரு ஆண்டுகளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பலமடங்கு குறைய வாய்ப்புள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், சுற்றுலாதொழிலை மட்டுமே நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தால், வரும் நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  குறைவது மட்டுமின்றி, நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.அதுமட்டுமின்றி, சுற்றுலாத்துறை மற்றும் பூங்காக்கள் மூலம் தோட்டக்கலைத்துறைக்கு கிடைக்கும் வருவாய் மிகவும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற பிரச்னை களைய அரசு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி இதனை கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.

 இதுகுறித்து சுற்றுலா அலுவலர் ராஜன் கூறுகையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.ஆண்டிற்கு 33 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.எனினும், கோடை சீசன் தவிர மற்ற சீசன்களில் சுற்றுலா பயணிகள் வருவது சற்று குறைந்து காணப்படுகிறது. அதேசமயம், தற்போது வார விடுமுறை நாளில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துகொண்டே செல்கிறது, என்றார்.

 சமூக ஆர்வலர் வக்கீல் விஜயன் கூறியதாவது: நீலகிரியில் எந்த ஒரு பொருளுக்கும் நிரந்த விலை கிடையாது. அறை கட்டணம் உயர்வு, உணவு பொருட்களின் விலை உயர்வு என சுற்றுலா பயணிகளை வியாபாரிகள் வஞ்சிக்கின்றனர். மேலும், அரசு பஸ்களில் கூட ஒரு நிரந்தர கட்டணம் கிடையாது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தற்போது வன விலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

alignment=

எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. அறை கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்களின் உயர்வு போன்றவைகளால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிப்பது மட்டுமின்றி, அடுத்து வரும் காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா செல்லலாம் என்பதையே மறந்து விடுகின்றனர்.  எளிமையாகவும், குறைந்த கட்டணத்திலும் செல்லக் கூடிய இடத்தை தேடுக்கின்றனர். இந்த பட்டியலில் ஊட்டி வராமல் போவதால், நாளடைவில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு விஜயன் கூறினார்.

 வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்து வருவதாக கூறப்படுவது ஏற்க முடியாது. நாளுக்கு நாள் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம், கடந்த காலங்களை போல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதையும், தனியார் வாகனங்களை எடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.

சுற்றுலா தலம் என்பதால், இதனை பயன்படுத்திக் கொண்டு சில வியாபாரிகள் அறைகள், உணவு உட்பட அனைத்து வகையான பொருட்களுக்கும் சுற்றுலா பயணிகளை பார்த்தவுடன் கட்டணத்தை உயர்த்துவதாக புகார் உள்ளது.  இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் தங்குவதையும், இங்கு உணவு உட்கொள்வதையும் தவிர்த்து வருகின்றனர். என்றனர்.

கல்லட்டி மலைப்பாதையில் அனுமதி இல்லை

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லவே வருகின்றனர். இங்கு சாலையோரங்களில் உலா வரும் யானைகள், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளை காணவே சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். ஆனால், தற்போது கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை அனுமதிக்காமல் போனதும், மசினகுடி பகுதிகளில் உள்ள ரிசார்ட்களை மூடியதாலும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  குறைந்துள்ளது.

alignment=

 கடந்த அக்டோபர் மாதம் கல்லட்டி மலைப்பாதையில் நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் உள்ள 40 காட்டேஜ் மற்றும் ரிசார்ட் மூடப்பட்டன. இதனால், வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருவதை தவிர்த்து, பந்திப்பூர் மற்றும் மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இதனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறையத்துவங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: