2வது இன்னிங்சில் ஆஸி. திணறல் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு: அஷ்வின், ஷமி அசத்தல்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புஜாரா 123 ரன் விளாசினார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். இதையடுத்து, 15 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா,  3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன், ரகானே 1 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய புஜாரா அரை சதத்தை நிறைவு செய்தார். புஜாரா - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது. ரகானேவும் அரை சதம் அடித்து அசத்தினார். புஜாரா 71 ரன் (204 பந்து, 9 பவுண்டரி) விளாசி லயன் சுழலில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரோகித் ஷர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 28 ரன் (16 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அஷ்வின் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துணை கேப்டன் ரகானே 70 ரன் ( 147 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா டக் அவுட்டாகினர்.

ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன் எடுத்திருந்த இந்தியா, மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டை இழந்து 106.5 ஓவரில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் அபாரமாகப் பந்துவீசி 42 ஓவரில் 7 மெய்டன் உட்பட 122 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டார்க் 3, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பிஞ்ச், ஹாரிஸ் இருவரும் துரத்தலை தொடங்கினர். பிஞ்ச் 11 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். ஹாரிஸ் 26 ரன், கவாஜா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஹேண்ட்ஸ்கோம்ப் 14 ரன் எடுத்து ஷமி வேகத்தில் புஜாராவிடம் பிடிபட்டார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 31 ரன், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 219 ரன் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று பரபரப்பான கடைசி நாள் சவாலை சந்திக்கிறது. எஞ்சியுள்ள விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: