×

முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி கோழிப்பண்ணையாளர்கள் என்இசிசி மீது குற்றச்சாட்டு: மீண்டும் மோதல் அபாயம்

நாமக்கல்: முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாக, என்இசிசி மீது  கோழிப்பண்ணையாளர் சங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால், இன்று நடைபெறும் முட்டை விலை நிர்ணய கூட்டத்தில் மோதல் ஏற்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.
 நாமக்கல் மண்டலத்தில் தினமும் 3.50 கோடி முட்டை உற்பத்தியாகிறது. இவற்றுக்கு நாமக்கல் மண்டல, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்இசிசி) வாரம் 3 நாட்கள் விலை நிர்ணயிக்கிறது. குறிப்பாக 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைக்கு மட்டுமே என்இசிசி விலை நிர்ணயம் செய்கிறது. தற்போது நாமக்கல் மண்டலத்தில், ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 410 காசாக உள்ளது. கடந்த ஒரு  வாரத்தில் மட்டும் முட்டை விலையில் 15 காசுகள் வரை என்இசிசி மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் உயர்த்தியுள்ளார்.

 இந்த விலை நிர்ணயத்தில், குளறுபடி நடப்பதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சின்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: தற்போது வடமாநிலங்களில் கடும் குளிர் காரணமாக, முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை அதிகரித்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் அனைத்து பண்ணைகளிலும், கடந்த ஒரு வாரமாக முட்டை உற்பத்தியை விட, விற்பனை அதிகமாக உள்ளது. நாமக்கல் மண்டலத்திலும், வட மாநிலங்களின் முட்டை விலைக்கு இணையாக உயர்த்த  வேண்டும். நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு முட்டை விலையை உயர்த்த மறுத்துவருகிறது.

எனவே இன்று (10ம் தேதி) நடைபெறும், முட்டை விலை நிர்ணய கூட்டத்துக்கு பண்ணையாளர்களை அழைத்து சென்று,காரணம் கேட்க உள்ளோம் என்றார்.இது குறித்து பரமத்தி வட்டார தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தர்மலிங்கம் கூறும்போது, நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 410 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால்  இந்த விலையில் இருந்து,  30 காசு குறைத்துதான் பண்ணையாளர்கள் வியாபாரிகளிடம் முட்டையை விற்கிறார்கள். பண்ணையாளர்களின் நலன்கருதி சரியான முறையில் என்இசிசி முட்டை விலை நிர்ணயம் செய்து வருகிறது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collision , Eggs , messed,pricing, Poultry Accused , NICC
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு