இன்று அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில் பள்ளி அலுவலக அறையை உடைத்து வினாத்தாள் அவுட்

* செல்போனில் படம் பிடித்து சென்றனர் * தேவகோட்டையில் 2வது சம்பவம்

தேவகோட்டை: இன்று அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில் பள்ளி அலுவலக அறையை உடைத்து வினாத்தாள்களை படம் பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் வினாத்தாள்கள் நெல்லையில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து,  தேவகோட்டை நகரில் உள்ள நகரத்தார் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து சேரும். அங்கிருந்து தேர்வுக்கு முன்பு அந்தந்த பள்ளிகளில் இருந்து ஆசிரியர் ஒருவர் வந்து பெற்றுச் செல்வது வழக்கம். வினாத்தாள்கள் விநியோகம்  செய்வதற்கு ஒருங்கிணைப்பாளராக அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் உள்ளார்.இரண்டாம் பருவத்தேர்வு நடைபெற்றபோது, கடந்த நவ.28ம் தேதி கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள்கள் அவுட்டானது. இதை குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் சார்பில், மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில்  அனுப்பி வைக்கப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு துவங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்விற்கான வினாத்தாள்கள் 28  பள்ளிகளுக்கு வழங்குவதற்காக, தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப்பள்ளிக்கு 2 தினங்களுக்கு முன்பு வந்தது. 9 பண்டல்கள் கொண்ட சாக்குமூட்டைகளை தலைமை ஆசிரியர் வெங்கிடாசலம், தனி அறையில் வைத்து  பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று இந்த அறைக்கதவு உடைக்கப்பட்டு வினாத்தாள்கள் உள்ள சாக்குமூட்டைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் வெங்கிடாசலம் தேவகோட்டை டவுன் போலீஸ்  ஸ்டேஷனில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் வினாத்தாள்கள் உள்ள 9 பண்டல்கள்  பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதுவும் திருடப்படவில்லை. வினாத்தாள்களை மட்டும் சிலர் செல்போனில் படம் பிடித்து சென்றுள்ளனர். போலீசார் தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஒரு  சிலரிடம் விசாரணை நடத்தினர். தேவகோட்டை பகுதியில் 2ம் முறையாக வினாத்தாள் அவுட்டான சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

வாட்ச்மேன் அறையில் சாவி

தேவகோட்டை நகரத்தார் பள்ளி வாட்ச்மேன் சண்முகம். இவர் பள்ளியில் தலைமையாசிரியர் அறைக்கு எதிரில் உள்ள அலுவலக அறையில் தங்கி உள்ளார். இந்த அறையிலேயே தலைமையாசிரியர் அறை உட்பட முக்கிய  சாவிகளை ஒரு பேக்கில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு சாப்பிட சென்றபோது, சாவிகளை எடுத்த மர்ம நபர்கள் தலைமையாசிரியர் அறை கதவை திறந்து, தனி அறைக்கதவை உடைத்து  வினாத்தாள்களை படம் பிடித்துள்ளனர். பின்னர் மீண்டும் சாவியை பேக்கில் வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து முன்னாள் வாட்ச்மேன் ஒருவரிடம் விசாரணை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: