×

ஆஸ்திரேலியா 235 ரன்னில் ஆல் அவுட் முன்னிலை பெற்றது இந்தியா : 2வது இன்னிங்சில் உறுதியான ஆட்டம்

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்துள்ள இந்தியா வலுவான முன்னிலை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. செதேஷ்வர் புஜாரா 123 ரன், ரோகித் 37, பன்ட், அஷ்வின் தலா 25 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்திருந்தது. ஹெட் 61 ரன், ஸ்டார்க் 8 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் 15 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நாதன் லயன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஹெட் 72 ரன் எடுத்த நிலையில் (167 பந்து, 6 பவுண்டரி) ஷமி வேகத்தில் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஹேசல்வுட் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லயன் 24 ரன்னுடன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அஷ்வின், பூம்ரா தலா 3, இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 15 ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல்.ராகுல் - முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.2 ஓவரில் 63 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. விஜய் 18 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ஹேண்ட்ஸ்கோம்ப் வசம் பிடிபட்டார். ராகுல் 44 ரன் (67 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
புஜாரா - கேப்டன் கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி 71 ரன் சேர்த்தது. கோஹ்லி 34 ரன் எடுத்து (104 பந்து, 3 பவுண்டரி) லயன் சுழலில் பிஞ்ச் வசம் பிடிபட்டார். இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்துள்ளது. புஜாரா 40 ரன், ரகானே 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இந்தியா 166 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணி கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், இன்று பரபரப்பான 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia ,India ,innings , Australia v India: Virat Kohli wicket gives hosts hope in Adelaide
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!