12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 15 நாளில் தடை : திம்பம் மலைப்பாதையில் செல்ல

சத்தியமங்கலம்: தமிழக -கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. 16 டன் வரை பாரம் ஏற்றிய லாரி மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிகள் அனுமதிக்கப்படுகிறது. இதனால், மலைப்பாதையில் லாரிகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு இருமாநில போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்படுகிறது.

மேலும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், திம்பம் மலைப்பாதை, பண்ணாரி செக்போஸ்ட் ஈரோடு கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:திம்பம் மலைப்பாதையில் செல்ல 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு இன்னும் 15 நாட்களில் தடைவிதிக்கப்படும். மேலும், பேருந்துகள், 4 சக்கர வாகனங்கள் தவிர்த்து மற்ற கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை மலைப்பாதையில் அனுமதிக்கப்பட மாட்டாது.

குறுகலான மலைப்பாதை வளைவுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வன சோதனைசாவடியில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலைப்பாதையில் வாகனங்கள் சென்று சேர நேரக்கட்டுப்பாடு உள்ளது போல் இங்கும் நேரக்கட்டுப்பாடு முறை கொண்டு வர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்வதற்கான விதிமுறைகள் குறித்து ஓட்டுநர்கள், அந்தந்த மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வாகன விபத்தில் முதியவர் பலி