மேட்டுப்பாளையம் அருகே ஆற்றங்கரையோரம் ஷவர் அமைப்பு : யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கோயில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் ஆண்டுதோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றின் கரையோரம் நெல்லிமலை அடிவாரத்தில் 6 ஆண்டுகளும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்தது.

வழக்கம்போல் இந்த ஆண்டு 11 வது ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இந்த மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முகாம் அமைப்பதற்கான ஏற்பாடு முழுவீச்சில் நடந்து வருகிறது. யானைகளுக்கு உணவு தயாரிப்பதற்கான சமையல் கூடம் அமைக்க இரும்புச்சட்டங்கள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் அறை விரிவுபடுத்தப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணியும் பாகன்கள் தங்குவதற்காக ஷெட் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

மேலும், பவானி ஆற்றுப்படுகையோரம் யானைகளை குளிக்க வைப்பதற்காக ஷவர் மேடைமற்றும் குளியல் மேடை அமைக்கும்பணி நிறைவடைந்து விட்டது. கடந்த ஆண்டு ஷவர் மேடை மற்றும் குளியல் மேடை இடையே காலியாக இருந்த இடத்தில் கூடுதலாக குளியல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஷவர் மேடையில் ஷவர்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர யானை நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 12ம் தேதிக்குள் பணி அனைத்தையும் முடித்து விட வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் யானை முகாம்